ஊர்க் குருவிகள்

Oorkuruvigal

ஊர்க்குருவிகள் பயணங்களில் இணைந்துகொள்ள இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பவும்.

ஒரு கோடி!

சென்னையின் மக்கள் தொகை விரைவில் தொடப்போகும் அந்த மாபெரும் எண்ணிக்கை – ஒரு கோடி!

அதாவது தமிழ்நாட்டில் வாழும் 7 பேரில் ஒருவர் சென்னைக்காரராக இருப்பார். இதில் மிகப் பெரும்பாண்மையானோர் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்களே. இத்தனை மக்களுக்கான குடிநீர், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னை திணறிக் கொண்டுதான் இருக்கிறது.

தென்னை மரங்கள் சூழந்ததால் தேனாம்பேட்டையாகவும், புரச மரங்கள் அடர்ந்திருந்ததால் புரசைவாக்கமாகவும், சதுப்பு நிலங்கள் நிறைந்ததாகவும் இருந்த எழில்மிகு சென்னை, இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்காகவும், அகண்டு விரிந்த சாலைகளுக்காகவும், அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் தொகையின் தேவைகளைப் நிறைவு செய்வதற்காகவும் தனது இயற்கை வளங்களை இழந்து கொண்டே வருகிறது.

சென்னையின் தேவைகளுக்காக, சென்னையையும் தாண்டி காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்று சொன்னால் அது பிழை, சுரண்டப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும். காவிரி, பாலாறு ஆற்று மணல் சென்னைக்காக அள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வீராணத்தில் இருந்து தண்ணீர் வராவிட்டால் நம் கதி அதோ கதி தான்.

சென்னையின் பூர்வகுடிகள் அதிகம் பேர் வாழும் வட சென்னையில் தான் தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன. மாசுக்களும் தூசுக்களும் கலந்த காற்றும் நீரும் அவர்களின் வாழ்க்கையாகிப் போய்விட்டது. குவியும் மூலதனத்தின் நச்சுக்கள் வட சென்னைக்கு, பலன்கள் மீதி சென்னைக்கு- என்றாகிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்??

கூவம் நதி சாக்கடையாகிப் போனதை மறந்துவிட்டு கேன் வாட்டரைக் காசு கொடுத்து வாங்குகிறோம். அம்மா தண்ணீர் 10 ரூபாய்க்குக் கிடைப்பதைப் பற்றிச் சிலாகிக்கிறோம்! ரியல் எஸ்டேட் பிளாட்டுகளாக மாற்றப்பட்ட விளை நிலங்களை ‘எதிர்காலத் தேவைகளுக்காக’(!!) வாங்கிப் போடத் துடிக்கிறோம். வளர்ந்து வரும் சூழலியல் நெருக்கடிகளால் நாம் பாதிக்கப்படப் போவதை முன்னுணராத,  வேடிக்கைப் பார்க்கும் பெரும்பாலான படித்த நடுத்தட்டு மக்களுள் நாமும் ஒருவராக வாழ்ந்து வருகிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சி உலகை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது. ஆனால், நம்மை தனித் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும், சொந்த வியாபாரத்திலும் இன்னும் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் நம்மில் பெரும்பானோர் நாம் உண்மையிலேயே சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடுகிறோம்.

தமிழ்ச் சமூகம் இன்றளவில் இருக்கும் நிலை குறித்தும், அது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நாம் பேசுவதில்லை. வாரத்தில் 5 நாட்கள் வேலை, வார இறுதியில் ஃபுல் ரெஸ்ட். போரடித்தால் ஃபீனிக்ஸ் மாலும், சினிமா தியேட்டரும். கண்டிப்பாக, இவை மட்டுமே நமது இலக்குகள் அல்ல! நமது அலுவலகமும், நாம் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மட்டுமே நமது உலகமுமல்ல!
தாய் தகப்பனும், மனைவி குழந்தைகளும் மட்டுமே நமது உறவுகளல்ல. சோறூட்டும் தஞ்சைக் கிழவனும், ஆடை பின்னும் திருப்பூர் பெண் தொழிலாளியும்,  மீன்பிடிக்கும் மீனவனும் நமது உறவினரே. பிறந்து வளர்ந்த ஊர் மட்டும் நமது சொந்த ஊரல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தான்.

குடிப்பதற்கு கேன் வாட்டரும், பயன்பாட்டுக்கு மெட்ரோ வாட்டரும் மட்டும் நமக்குப் போதுமா? காவிரியும் முல்லைப் பெரியாறும், நொய்யலும் பாலாறும், வைகையும் தாமிரபரணியும் பாழானால் தண்ணீர் ஏது நமக்கு?

தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து வந்து சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ்ச் சமூகத்தின் பொருளியல், அரசியல் சூழலிருந்து ஒதுங்கி வாழும் நாம் மீண்டும் இச்சமூகத்தோடு இணைய வேண்டும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடைவரை, நவீன வசதிகளுடன் நகரங்களில் வாழும் நமக்கும், தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலுள்ள உழவனுக்கும் நிலவும் சமூக உறவை உணர வேண்டும். பெருகிவரும் நகரமயமாதலால் தொலைந்துபோன நம் வரலாற்றையும் வாழ்வியலையும் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு முதலில் நம் மண்ணையும், மக்களையும் பற்றி, அதைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளைப் பற்றி, அதற்கான தீர்வுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் முழுமையாக அறிந்து கொள்வோம்.

இவற்றை நோக்கிய முயற்சியாக, இளந்தமிழகம் இயக்கம், “ஊர்க் குருவிகள்” எனும் பயணத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் மூலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தல், அங்கு வாழும் மக்களிடம் உரையாடுதல், அவர்களின் வராலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளுதல், சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுதல், விவாதித்தல் உள்ளிட்டவைகளைத் தொடங்க உள்ளோம்.

வாருங்கள் நண்பர்களே, கை கோர்ப்போம்!
ஊர்க்குருவிகளின் வாயிலாக, சிட்டுக் குருவிகளாக மாறிடுவோம்!
மண்ணையும் மக்களையும் நோக்கிய நமது பயணத்தைத் தொடங்குவோம்!

தொடர்புக்கு: 9791143693 (அரவிந்தன்)

ஊர்குருவிகள் முகநூல் பக்கத்தில் இணைய

ஊர்க்குருவிகளின் பயணங்களைத் தெரிந்துகொள்ள பின்வரும் கட்டுரைகளைப் படியுங்கள்.