பாபர் மசூதி நில உரிமை வழக்கின் தீர்ப்பு அநீதியானது ! – இளந்தமிழகம் இயக்கம் அறிக்கை.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப் போகிறது எனும் செய்திகள் வெளிவரத் தொடங்கியவுடனே, அனைவரும் அமைதி காக்க வேண்டும்! எனும் அறிக்கைகள், செய்திகள் வந்து கொண்டிருந்தது. இதுவே, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதி குலைந்து விடக்கூடாது, தீர்ப்பின் மீதான எந்தவொரு எதிர்வினையும் சட்டத்திற்கு புறம்பானது என்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

 

நவம்பர் 9, 2019, காலை 10:30 மணிக்கு தீர்ப்பை வாசித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

 

அங்கு இராமர் கோயில் இருந்தது என இந்திய தொல்லியல் ஆய்வு மையம் நிரூபிக்கவில்லை. அதே போல இராமர் கோயில் இடிக்கப்பட்டு தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றெல்லாம் சொல்லிவிட்டு பாபர் மசூதி இருந்த நிலம் அரசிடம் வழங்கப்படுவதாகவும், மூன்று மாதத்திற்குள் அறக்கட்டளை நிறுவப்பட்டு இராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதியை இழந்த இசுலாமிய மக்களுக்கு வேறொரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

பத்தாண்டுகளுக்கு முன் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பான நிலப் பகிர்விற்கு உடன்படாமலே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நில உரிமை கோரல் வழக்கில், மொத்த நிலத்தையும் ஒரு தரப்பிடமே, அதுவும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியவர்களிடமே வழங்கியிருப்பது முரண் மட்டுமல்ல, நீதித்துறையின் சிதைவும் கூட.

பாபர் மசூதி நில உரிமை கோரல் வழக்கில், உண்மை, ஆதாரங்கள், தொல்லியல் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்காமல் நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய  நீதித்துறை நம்பிக்கையைப் பாதுகாக்கவும், கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவும் தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது நீதியல்ல. அநீதி.

 

பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம் என்று இன்றைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த குற்றத்தைச் செய்தவர்களுக்கான தண்டனை குறித்து எந்த குறிப்பும் இல்லை. இந்தத் தீர்ப்பை பற்றிய வெறுப்போ, கொண்டாட்டமோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நீதிமன்றங்கள் எனும் அமைப்பு வழக்குகளை தீர விசாரித்து ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டும் இடம் என்பதே சாமானிய மக்களின் நம்பிக்கை. ஆனால், இராமன் குறித்த நம்பிக்கையை காப்பதற்காக தீர்ப்பு வழங்கப்பட்டு நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்வி குறியாக்கியுள்ளது.

 

சனநாயகக் கட்டமைப்பில் நீதியை நிலைநாட்டுவதே நீதிமன்றத்தின் தலையாய கடமை. நீதிபதி லோயா கொலை வழக்கை தனக்கு விருப்பப்பட்ட அமர்வுக்கு முந்தைய தலைமை நீதிபதி  பரிந்துரைத்ததனால் அவர் மேலே சக நீதிபதிகள் குற்றம் சாட்டினார்கள், தன் மீதான பாலியல் வன்முறை வழக்கிற்கு தானே நீதிபதியாக இருந்தார், ஓராண்டுக்கும் மேலாக மனித உரிமை ஆர்வலர்களை அர்பன் நக்சல் என முத்திரை குத்தி அரசு சிறையில் அடைத்திருப்பதை ஆதரித்து நீதிமன்றங்கள் தீர்ப்பெழுதியது, காஷ்மீரில் 370ஆவது சட்டத்தை நீக்கி அரசு நடத்தி வரும் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக இருப்பது, இன்று பாபர் மசூதி நில உரிமை கோரல் வழக்கில் மசூதியை இடித்தவர்களுக்கே நிலத்தை வழங்கியது என  அநீதியான வழியிலேயே உச்ச நீதிமன்றம் பயணித்து நீதியை குழி தோண்டி புதைத்து வருகின்றது.

 

இன்று பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதியானது என இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. மத நல்லிணக்கம் என்பது வெற்று வார்த்தையல்ல, அது ஒரு மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை. இன்றைய தீர்ப்பு முன்னேறிச் செல்லும் ஒரு சமூக ஒழுங்கை பின்னோக்கி இழுப்பதை தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இளந்தமிழகம் இயக்கம் கோருகின்றது.

 

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *