அரசு ஊழியர்களின் போராட்டத்தை இளந்தமிழகம் இயக்கம் ஆதரிக்கின்றது – செய்தி அறிக்கை

ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து இன்று நான்காவது நாளாக போராடி வரும் அரசு ஊழியர் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக அரசு செவி சாய்க்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடுகிறார்கள் என்றாலே அவர்கள் ஊதிய உயர்வு கேட்டுத் தான் போராடுகிறார்கள் என்கிற தவறான கருத்து ஒரு புறம் தொடர்ந்து பரப்பபடுகிறது. இது முற்றிலும் தவறு.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற்று, பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்படும் அநீதி, பல்வேறு மட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓட்டுநர்கள், அமைச்சுப் பணியாளர்களின் இவர்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைதல், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளோடு, 5000 அரசு பள்ளிகள் மூடும் அரசு அறிவிப்பையும் 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைத்தல், 3500 சத்துணவு கூடங்களை மூடுதல், இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 56 ஐ நீக்கக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்கள் போராடுவது அவர்களுக்காக மட்டும் அன்றி, சிறப்பு கால ஊதியம் பெற்று வரும் சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவர்கள்,ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கான வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் இப்போராட்ட கோரிக்கைகளுள் ஒன்று.

இந்தப் போராட்டம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விரும்பி ஏற்றுக் கொண்ட போராட்டமல்ல. பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் போராடியும், செவி மடுக்காத தமிழக அரசே ஆசிரியர்களின் இப்போராட்டத்துக்கு முழு பொறுப்பு. மாணவர்களின் தேர்வுக் காலங்களில் ஆசிரியர்கள் போராடுவது சரியா என்று பாதிக்கப்பட்ட ஊழியர்களை நோக்கி கேள்வியெழுப்பாமல், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளிய தமிழக அரசை நோக்கி மக்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டம் கல்வி வேலை வாய்ப்பு சமூகநீதி உள்ளிட்ட கோரிக்கைகளோடு, நம் சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்கிற கருத்தை பொதுச்சமூகம் உணர்ந்து கொண்டு, ஜாக்டோ ஜியோவின் இப்போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தர வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு இளந்தமிழகம் இயக்கம் தோள் கொடுக்கிறது. வெல்க ஆசிரியர் போராட்டம்!

இங்ஙனம்
வினோத் களிகை
செய்தி தொடர்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *