உயர்சாதினருக்கு பொருளாதார அடிப்படையில் 1௦% இடஒதுக்கீடு – சமூக நீதிக்கு எதிரானது! – இளந்தமிழகம் இயக்கம் அறிக்கை

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அவசரகதியில் உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் சட்டவரைவை அறிமுகப்படுத்தி, இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி அரசு.

இந்த சட்டம் முதலாவதாக, இடஒதுக்கீடு என்பது சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் உரிமை எனும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே தகர்க்கக் கூடியது. பாரதீய சனதா கட்சியின் கொள்கை என்பது வரலாறு முழுக்க இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.

இரண்டாவதாக, இன்னும் மூன்றே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும் எனும் நிலையில், ஐந்தாண்டு கால ஆட்சியின் படுதோல்வியை மறைப்பதற்கு ஒரு கேடயமாக இந்த இடஒதுக்கீட்டு சிக்கலைக் கிளப்பியிருக்கிறது மோடி, அமித் ஷா கூட்டணி.

இளந்தமிழகம் இயக்கத்தை பொறுத்த வரையில் ஆண்டாண்டு காலமாக எதனைக் கருவியாக கொண்டு மக்களை சனாதனிகள் ஒடுக்கி வைத்திருந்தனரோ, அதன் அடிப்படையிலிலேயே சமூக நீதியும் அளிக்கப்பட வேண்டும். இந்திய சமூக அமைப்பில் மக்களைக் ஒடுக்கும் கொடூரக் கருவியாக இருப்பது சாதியக் கட்டமைப்புதான். இந்த கட்டமைப்பைத் தகர்த்து எறியப்படுவதற்கான பாதையில் சமூகநீதி என்பது இன்றியமையா விளக்காகும்.

பொருளாதார அடிப்படையில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாதா ?, அவர்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பு பெற வேண்டாமா எனும் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவர்களுக்கு நாம் கூற விழைவது என்னவென்றால், இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல. பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினருக்கு உண்மையிலேயே இந்த அரசு உதவ விரும்பினால் கல்வி ஊக்கத்தொகை மூலம் உதவலாம். இடஒதுக்கீடு அதற்கான வழியல்ல என்பதே எமது கருத்தாகும்.

அதனுடன், இடஒதுக்கீடு எனும் சமூகநீதி கருத்தாக்கம் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒரு சாதியினர் இடம்பெற்றுவிடுவதுடன் முடிவதல்ல. மாறாக, அதிகாரத்தில் அனைத்து சாதியின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் இடம் நோக்கி நகரும் காலம் வரை இடஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும்.

இன்றைய சூழலில் தேர்தலை முன்னிறுத்தியே இந்த இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டாலும், அதன் அடிப்படையே தவறு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே உணரவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். காங்கிரசு கட்சி இந்த சட்ட வரைவை ஆதரித்து தாங்கள் மிதவாத இந்துத்துவ கட்சி என்பது மீள் உறுதி செய்துள்ளனர்.

அதிமுகவும், பா.ம.க-வும் பெயரளவில் இந்த சட்ட வரைவை எதிர்த்தாலும் தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் இந்த சட்டவரைவின் மீதான ஓட்டெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்துள்ளன. தமிழகத்தில் திமுக, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், அகில இந்திய அளவில் இந்திய முஸ்லிம் யூனியன் லீக், ஓவைசியின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இந்த சட்ட வரைவை எதிர்த்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு ஒரு லட்சம் வேலைவாய்ப்பினைக் கூட உருவாக்கவில்லை, அதே நேரம் ரபேல் ஊழல் என நிர்வாகத்திலும் கோட்டை விட்டது.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து அனைத்து மக்களையும் வீதியில் நிறுத்தியது. இந்த சீர்கெட்ட ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைதிருப்பவே இந்த சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது பாசிச மோடி அரசு. இதுபோன்ற சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனீய நரித்தனங்களுக்கு எதிராக இளந்தமிழகம் இயக்கம் அறிவாயுதம் ஏந்தும் என உறுதியளிக்கிறோம்.

இங்ஙனம்,
வினோத் களிகை
செய்தித் தொடர்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *