ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான ஐயா கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இளந்தமிழகம் இயக்கத்தின் இரங்கல் !

 

 

தேதி : 07.08.2017

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான ஐயா கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இளந்தமிழகம் இயக்கத்தின் இரங்கல் !

 

தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை இருந்தவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான ஐயா கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருத்தமடைகிறோம். அவரை இழந்து வாடும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்களுடன் எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

 

அரசியல் முரண்பாடுகள் கடந்து கலைஞர் கருணாநிதி அவர்கள் சமூக நீதிக்கான சட்டங்கள் , உரிமைகள், செயல்திட்டங்கள் தமிழக மக்களுக்கு கிடைத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் பெரியார் கனவிற்கு சட்ட வடிவம் கொடுத்தவர், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதை நோக்கி தள்ளிய பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்தவர் என்பதை இளந்தமிழகம் இயக்கம் நினைவு கூறுகின்றது.

 

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் நிலவிவரும் இன்றைய சூழலில், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும்.

 

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு சமூக, அரசியல் மாற்றங்களுக்கு சொந்தக்காரர், மொழி உரிமைப் போராளி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியே காணாமல் அறுபது ஆண்டு காலமாக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர், ஐம்பது ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தவர், பார்ப்பனீயத்திற்கு எதிராக வாழ்நாள் முழுக்க போராடியவர், இலக்கியவாதி என பன்முகத் திறமை கொண்ட ஒரு தலைவராக‌ தமிழக வரலாற்றில் கலைஞர் என்றும் இருப்பார்.

 

கலைஞ‌ருக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கிட வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 

காவி பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமூக நீதி கொள்கைகளுக்காகவும், சனநாயகத்திற்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் , தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் , மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதை கவனத்தில் கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் பயணிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ராசன் காந்தி

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *