காவி பயங்கரவாத, கார்ப்பரேட் நல இந்திய அரசுக்கு எதிராக ‌அணி திரள்வோம்! – இளந்தமிழகம் இயக்கம் அழைப்பு

காவி பயங்கரவாத, கார்ப்பரேட் நல இந்திய அரசுக்கு எதிராக ‌அணி திரள்வோம்! – இளந்தமிழகம் இயக்கம் அழைப்பு !

2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் ஆட்சி அமைந்ததில் இருந்து, மாற்றுக் கருத்து கொண்ட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வதென்பது தொடர்ச்சியாக நடக்கிறது. தற்போது இந்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் காவல் துறையினரால் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டது, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு இருப்பது, விவாத நிகழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்பினர் மீது வழக்கு பதியாமல்,  இயக்குனர் அமீர் மீதும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும் வழக்கு பதிந்து இருப்பது, பிரதமர் உயிருக்கும் ஆபத்து ‌எனும் போலி குற்றச்சாட்டை வைத்து தலித்‌ செயற்பாட்டாளர்களும், பொதுவுடைமைத் தோழர்களும் ஒடுக்கப்படுவது என நாட்டில் ஓர்‌ அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. மாநில உரிமைகளை போராடிப் பெறுவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு‌ வைத்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஆகியோர் மோடியின் அடிமைகளாக செயல்பட்டு வருகின்றனர்.

ஜுன்-12 காவிரி நதிநீர் திறக்க வேண்டிய நிலையில் ஐயா. மணியரசன் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள்!

நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்வதற்கு இரயில் நிலையத்திற்கு வரும் வழியில், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா.மணியரசன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அரசின் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துத் தொடர்ச்சியாக போராடி வருபவர் ஐயா மணியரசன் அவர்கள் ஆவார். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, அவரை தாக்கியவர்களை கைது செய்யாமல் வைத்திருப்பது, இந்த தாக்குதலுக்கு காரணம் ஆளும் அரசுகள்தான் எனும் கருத்தை உறுதி செய்கின்றது.

கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக பொது மக்களும், சனநாயக, மனித உரிமை இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என‌ இளந்தமிழகம் இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கின்றோம்!

காவிப்‌ பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்!
கார்ப்பரேட், இயற்கை வள அழிப்புத் திட்டங்களை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை மீட்போம்! சங்பரிவார ‌ஆட்சியைத் தகர்த்திடுவோம்!

இங்ஙனம்,
இராசன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழகம் ‌இயக்கம்
11/06/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *