ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்துகுடி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழக அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்.

 

நாள் : 22.05.2018

சென்னை

கண்டன அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்துகுடி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழக அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்.

தூத்துகுடி மண்ணை, காற்றை, நீரை நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து  போராடி வரும் மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராடுவதாக அறிவித்திருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் போராட்டம்  ஆலை தொடங்கிய போதே தொடங்கியது. இந்நிலையில் ஆலையை 100% விரிவாக்கம் செய்ய ஆலை நிர்வாகம் அனுமதி கேட்டது மக்கள் போராட்டத்தை அதிகப்படுத்தியது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இன்று தூத்துகுடியில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் பினாமி அரசான எடப்பாடி. பழனிசாமி அரசு ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், பல மாவட்ட காவல்துறை தலைவர்களையும் தூத்துகுடிக்கு இன்று அனுப்பியது.

காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை எடுத்த எடுப்பிலேயே மக்களின் மீது தடியடி நடத்தி மக்களின் மீது வன்முறையை பயன்படுத்தியது, தடியடியினால் மக்கள் பீதியில் ஓடத்துவங்கிய நொடியில் துப்பாக்கி சூட்டைத் துவங்கியது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பியக்கத்தின் முன்னணி ஒருங்கிணைப்பாளரும், புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தின் தோழருமான தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராம், தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் ஜெயசீலன் தூத்துகுடியைச் சேர்ந்த‌ கந்தையா, 17 வயது மாணவி வெனிஸ்டா,   சண்முகம் , அந்தோணி செல்வராஜ், மணி ராஜ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

படுகொலை செய்யப்பட்ட அனைவரும் 100 நாட்களாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியினர்.  யாரையெல்லாம் சுட வேண்டும் என திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது தமிழக காவல்துறை.  இந்த படுகொலையை துப்பாக்கி சுடுதலில் நன்கு பயிற்சி பெற்ற ஸ்னைப்பர் காவலர்களை பயன்படுத்தியுள்ளார்கள்.  சுட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் மார்பு, மார்பு பகுதிக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது.  மாணவி வெனிஸ்டாவின் வாயில் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறை தடியடியில் காயம்பட்டு ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள், உறவினர்கள் மீதும்  காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

மெரினாவில் காவல்துறையினரே ஆட்டோவை எரித்ததைப் போலவே தூத்துகுடியிலும் காவல்துறை தங்கள் வாகனங்களையும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் சில வாகனங்களையும் எரித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்காக ஆலை முதலாளியுடன் சேர்ந்து கொண்டு எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டு வன்முறையை, படுகொலையை அரங்கேற்றியுள்ளது. இதில் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் எடப்பாடி. பழனிசாமியும், அவரது அரசும் , தமிழக அரசின் தலைமை செயலாளர். கிரிஜா வைத்தியநாதன், தூத்துகுடி மாவட்ட ஆட்சியர், தமிழக காவல்துறை என எல்லோரும் குற்றவாளிகளே.

இந்த படுகொலையை திட்டுமிட்டு நடத்திய எடப்பாடி அரசே பதவி விலகு, இந்த படுகொலையில் பங்கு கொண்ட அனைவரும் பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும்.

 

ராசன் காந்தி,

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *