முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி!

 

2009 மே மாதம், ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில் நடந்த நாட்கள், தமது போராட்டத்தில் நியாயம் இருப்பதால் வெல்வோம் என நம்பியிருந்த ஈழத்தமிழின மக்களுக்கு மரணிப்பது, அல்லது எதிரியிடம் சரணடைந்து முகாமுக்கு செல்வது என இரண்டு வாய்ப்புகளை மட்டுமே உலகம் வழங்கியது.

உலக ஒழுங்கு, அரசுகளின் நீதி, மானுட விழுமியங்கள் என அனைத்தும் முள்ளிவாய்க்காலில் அம்பலப்பட்டு போயின, போரை எவ்வளவு வேகமாக நடத்த முடியுமோ அவ்வளவு வேகமாக, இடைவெளிவிடாமல் நடத்தி அப்பாவி மக்களை பலிகொண்டது பெளத்த சிங்களப் பேரினவாதம்.

போர் முடிந்ததாக உலகிற்கு அறிவித்துவிட்டு இறுதி நாட்களில் முடிந்தவரை தமிழர்களை கொன்று அழித்து, போராளிகளை கைது செய்து காணாமல் போகச் செய்தது சிங்களப் பேரினவாத அரசு. இந்தியா, மேற்குலகம் உள்ளிட்ட உலகநாடுகள் தமிழின அழிப்பை தடுக்கத் தவறி சிங்கள அரசுக்கு துணை நின்றன.

இன அழிப்புக்கு ஆதாரமாக ராஜபட்சே அரசு மக்கள்தொகையை குறைத்துக்காட்டியது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது. குழந்தைகள், பெண்கள் என வகை தொகையில்லாமால் கொன்றோழித்தது என இனப்படுகொலையை நிறுவும் ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன, பல வல்லுநர் குழு அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. இருந்தும் இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கு, 9 ஆண்டுகள் கடந்த பிறகும், இனப்படுகொலை என்பதற்கான விசாரனையை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி உலக நாடுகளால் மறுக்கப்படுகிறது.

விடுதலைக்கான போராட்டங்கள் ஒரே நாளில் தொடங்குவது இல்லை, ஒரே தலைமுறையோடு முடிந்து விடுவதும் இல்லை. 2009 இனப்படுகொலை நாட்களில், தமிழநாட்டின் கையறு நிலையில் முத்துக்குமார் தொடங்கி 18 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தீக்குளித்தார்கள். அவர்களின் ஈகமே தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை அரசியல் களத்திற்கு இழுத்து வந்தது. பின்பு பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு நீதி கோரிய தமிழ்நாடு மாணவர்கள் கூட்டம், இந்திய அரசு ஐ.நா மன்றத்தில் சிங்கள அரசிற்கு ஆதரவாக செயல்படக் கூடாது என வெகுண்டெழுந்து ஆயிரக்கணக்கில் போராட்டக்களத்துக்கு வந்தார்கள். தொடர்ந்து மெரினாவில் தங்களது உரிமைக்காக இலட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் போராட்டமும் நடந்தது. இன்று தமிழ்நாட்டில் தமிழர் உரிமைகள் காக்கும் போராட்டம் நடக்காத நாளே இல்லை என்ற நிலை வந்துள்ளது.

கையறு நிலையில் நின்றவர்கள், அதற்கான காரணம் தேடியதாலேயே இன்றையப் போராட்டங்கள் நடக்கின்றன.

போர் முடிந்து 9 ஆண்டுகளுக்கு பின்பு அமைதி திரும்பிவிட்டதாக சிங்கள அரசு சொன்னாலும் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் நீடிக்கத்தான் செய்கின்றது. ஈழத்தில் உறவுகளைத் தொலைத்தவர்கள் இன்றும் தங்கள் உறவுகளை தேடி போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களைப்பற்றி எந்த தகவலும் இன்றுவரை இல்லை, தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலைக்காக சிறையில் போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் காரணங்கள் அப்படியே இருக்கின்றன, சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகம் எங்கும் பல்வேறு வடிவில் விரவி இருக்கின்றது. ஆட்சி மாற்றம் சிங்களவர்களுக்கு உலக நாடுகள் மத்தியில் அரசியல் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது, தமிழர் வாக்குகளைக் கொண்டே சிங்கள அரசு தனது அரசியல் வெற்றியை பெற்றுக் கொண்டனர். அண்மைய உள்ளூர் ஆட்சித் தேர்தல் முடிவுகள் 2020 இலங்கை அதிபர் தேர்தலில் இன அழிப்புக்கு தலைமை தாங்கிய இராசபக்சே தரப்பு மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்ற சூழலை நம் கண்முன் நிறுத்துகின்றது. தமிழர்களின் நீதிக்கான குரலை முன்னை விட நாம் இன்னும் வலிமையாக உலக அரங்கில் எழுப்ப வேண்டிய சூழல் எழுந்துள்ளது. ஈழத் தமிழர்கள் தங்கள் விடுதலைக்காக போராடிய காரணங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது. நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்!

ஈழ விடுதலையே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான அஞ்சலி என உறுதியேற்போம்.

 

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் ! 

 

ராசன் காந்தி

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *