#GobackModi டிவிட்டர் பரப்புரை வெற்றி குறித்த அறிக்கை

14/04/2018

 

செய்தி அறிக்கை 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மோடி தலைமையிலான இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும், கையாலாகாத பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்தும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஏப்ரல் 12- 2018, சென்னை, திருவிடந்தையில் நடைபெற்று வரும் பாதுகாப்புத் துறை கண்காட்சிக்கு வருகை தந்த இந்தியப்‌ பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக “தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி” உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் களத்தில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தின. வான்மார்க்கமாக சென்றவருக்கு தங்கள் எதிர்ப்பு உணர்வைத் தெரிவிக்கும் விதமாக கருப்பு வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஐ.ஐ.டி-யில் பயிலும் மாணவர்கள் கல்வியை தனியார்மயமாக்கும் மோடி அரசைக் கண்டித்தும், காவிரி உரிமைக்காகவும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினார்கள்.

சமூக வலைதளங்களில் “மோடி திரும்பிப் போ!” எனும் பொருளில் #GoBackModi எனும் இடுகையுடன் வெளியிடப்பட்ட ட்விட்கள் காலை முதலே கவனம் பெறத் தொடங்கின. மாலை 5 மணி நிலவரப்படி, 5.5 லட்சத்திற்கும் அதிகமான “மோடி திரும்பிப் போ!” எனும் இடுகையுடன் கூடிய ட்விட்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் வெளியிட்டு மோடியின் வருகைக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

#GoBackModi எனும் இடுகை இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் அதிக எண்ணிக்கையில் வலைதளப் பதிவர்களால் பயன்படுத்தப்பட்ட இடுகையாக சில மணி நேரங்கள் முதலிடம் பெற்றது.

தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி‌ நடைபெறும் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் “காவிரி உரிமை மீட்புக் குழுவில்” இடம்பெற்றிருக்கும் இளந்தமிழகம் இயக்கம், தன்னாட்சி தமிழகம், பச்சைத் தமிழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தேசிய, திராவிட மற்றும் பொதுவுடைமை  அமைப்புகள், தன்னார்வு நண்பர்களுடன் இந்த சமூக வலைதளப் பரப்புரையை முன்னெடுத்தன.

காவிரி உரிமை குறித்த அக்கறையோடு, சமூக வலைதளப் பரப்புரைகளில் பங்கெடுத்த நம் நண்பர்கள், பிற மாநில மக்கள், அரசியல் இயக்க, கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றிகள்!

தமிழ்நாட்டை சூழ்ந்து இருக்கும் நாசகாரத் திட்டங்களை அடித்து விரட்டும் வரை, காவிரி மேலாண்மை வாரியம் அமையப் பெற்றிடும் வரை அயராது உழைத்திடுவோம்!

 

No automatic alt text available.

இங்ஙனம்
இராசன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்
காவிரி உரிமை மீட்புக் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *