காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம்

தேதி : 03.04.2018

செய்தி அறிக்கை

இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆறு‌ வார காலக்கெடு முடிந்துவிட்டது. வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கிற, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு. மாநில உரிமைகளுக்கான போராட்டங்களில் எப்போதும் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டில், தற்போது அதிகாரத்தில் இருக்கும் முதுகெலும்பில்லாத அதிமுக அரசு, இந்திய அரசின் துரோகத்தை மறைக்கும் வேலையைச் செய்து வருகிறது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை மறுக்கப்படுவது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மறுப்பது, கூடங்குளத்தில் அணு உலை அமைப்பது, தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது, தஞ்சாவூரில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுப்பது, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைத்தது என நாசகாரத் திட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டு வளங்களை அழிப்பதுடன், இந்திய ஒன்றியத்திற்கு தேவையான வளங்களை சுரண்டுவதற்கான மாநிலமாக மாற்றி வருகிறது இந்திய அரசு.

தற்போதுள்ள சூழலில், தமிழக மக்களின் உடனடி கோரிக்கையான காவிரி‌ மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி‌ நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம். 03, ஏப்ரல், 2018 அன்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு கடையடைப்புப்

போராட்டத்திற்கும், ஏப்ரல் 11-ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் கடையடைப்பிற்கும் இளந்தமிழகம் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

இளந்தமிழகம் இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களில் பங்கெடுக்குமாறும், போராட்டம் பற்றிய செய்திகளை தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தொடர் போராட்டங்களை, பெருந்திரள் மக்கள் போராட்டங்களாக முன்னெடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

 

இங்ஙனம்,

இராசன் காந்தி, 9840880737

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *