கன்னியாகுமரி மக்களுக்காக தமிழக மக்கள் ஒன்றுபடுவோம் !
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசின் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே, இன்னும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. கடலோர மீனவக் கிராமங்கள் மட்டுமின்றி, குமரியின் பிற பகுதிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கேரளா, கோவா, மகாராஷ்டிரா என மீனவர்கள் பிற மாவட்டங்களில் கரை ஒதுங்கிய செய்திகள் வருமளவிற்குக் கூட, அரசால் காப்பாற்றப்பட்டிருக்கும் மீனவர்கள், புயல் நிவாரண நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் இல்லை. புயல் சின்னம் பற்றிய அறிவிப்பு உரிய நேரத்தில் வரவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.அதோடு வேகமான செயல்பாடுகளில் இறங்கி, பாதிப்பின் வீரியத்தை கட்டுக்குள் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறது கேரள அரசு.
ஆனால், தமிழக அரசின் நிலையோ, செயல்பாடுகளோ தலைகீழாக உள்ளது. அவ்வப்போது, நிவாரணத் தொகைகளை அறிவிப்பதோடு, ஆர்.கே நகருக்கு சென்றுவிடுகிறார் முதல்வர் பழனிசாமி.
ஆர்.கே நகரில் முகாமிட்டு, இடைத்தேர்தல் வெற்றிக்கு உழைக்கும் தமிழக அமைச்சர்கள், குமரி மாவட்டம் குறித்து சிறு அக்கறையும் செலுத்தவில்லை. அது அறிந்துதான், குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணையுங்கள் எனும் முழக்கத்தை குமரி மக்கள் முன்னெடுக்கின்றனர். மொழி அடிப்படையில் தமிழகத்துடன் இணைய வேண்டும் என 50 ஆண்டுகளுக்கு முன் போராடி தமிழ்நாட்டுடன் இணைந்த மக்களை இவ்வாறு சிந்திக்கச் செய்தது அரசின் மெத்தனப் போக்கு மட்டுமே. இன்று வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களின் நிலைக்கு காரணம் இயற்கை அல்ல; கையாளாகாத அரசே.
மக்களின் நலன்களை முன்னிறுத்தும் ஒரு அரசியல் கட்சிக்கு, எந்த ஒரு தேர்தலும் அச்சுறுத்தும் போட்டியாக இருக்கப் போவதில்லை. ஆனால், மக்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமல், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்தாலும், ஆட்சியாளர்களின் எண்ணம் ஈடேறாது. இது ஒன்றுக்கும் உதவாத பழனிசாமி அரசுக்கு மட்டுமல்ல; சிறு துரும்பை நகர்த்தினாலும், உலகத்தையே புரட்டிவிட்டது மாதிரியான விளம்பரங்களைச் செய்யும் மோடி அரசுக்கும் பொருந்தும்.
காலாவதியாகிவிட்ட முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனும் நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. இருந்தும் ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஒரே காரணத்திற்காக பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
- இன்றுவரை கரைதிரும்பாத மீனவர்களை தேடும் பணியைத் துரிதப்படுத்திட வேண்டும்.
- கன்னியாகுமரி, தூத்துக்குடி நாகப்பட்டினம் என பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடு
- புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்திடு!
- ஓகி புயலால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு.
உப்பு நீரில் ஊறிப் பெருத்த உடலும், வெளியே முட்டிக்கு கொண்டும் நிற்கும் கண்களுமாய் கரை ஒதுங்கும் மீனவர்களின் உடல்கள் சொல்கின்றன அவர்கள் அனுபவித்த துயரத்தை. தலைநகர் சென்னைக்காக திரண்டு வந்த தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும் குமரி மாவட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். ஓர் அரசு இருந்து செய்ய வேண்டிய வேலையை மக்களே செய்ய நாம் வேண்டுவதற்கு காரணம், தமிழகத்தில் ஒரு அரசு இருப்பதாக மக்கள் எண்ணவில்லை என்பதுதான்.
வினோத் களிகை
செய்தி தொடர்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்.