செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம்

செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு, மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 11000 செவிலியர்கள் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம்  பணிக்கமர்த்தப்பட்ட செவிலியர்கள்,
 2 ஆண்டுகள்  தற்காலிகப் பணியாளர்களாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு மாத ஊதியமாக 7000 ரூபாய் வழங்கப்படும் எனவும்,  பணி நியமன ஆணை குறிப்பிடுகிறது.
ஆனால், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் பணி நிரந்தரம் தராமலும், ஊதிய உயர்வு வழங்காமல் இருந்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில்
போராடத் தொடங்கிய செவிலியர்களின் கோரிக்கைகளை காதில் வாங்காமல், போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.
செவிலியர் பிரதிநிதிகளுக்கும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 90 விழுக்காடு கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், பணி நிரந்தரம் செய்ய கால அவகாசம் தேவை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், சுகாதாரத் துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற போராடும் செவிலியர்களின் பிரதிநிதிகளுக்கு பயங்கர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அரசை நம்பி நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுப்பதாக கூடாது எனும் செய்தியையே செவிலியர்களின் பிரதிநிதிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் நமக்குத் தருகின்றது.
நீட் தேர்வுக்கு விலக்குப் பெற கால அவகாசம் இருக்கிறது என்றிருந்த தமிழக சுகாதாரத் துறை, உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த கணமே மருத்துவ கலந்தாய்வுக்கு தேதிகளை அறிவித்தது. அப்போது கால அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் வந்து 200-க்கும்   மேற்பட்டோர் இறந்த போது கால அவகாசம் எடுத்து உயிர் பலிகளை வேடிக்கைப் பார்த்த அரசு, அமைச்சர் பதவிகளை பிடிப்பதிலும், முன்னாள் முதல்வர் இறந்த அன்றே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதிலும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேயில்லை.
மக்களின் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கை என்று வரும்போது தான் அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. தங்களுடைய பதவி, பதவிக்கான பேரம் என்று வரும்போது இருபத்தி நான்கு மணிநேரமும் கண் உறங்காமல் செயல்படுகிறது எடப்பாடி அரசு.
No 144 issued in DMS said South Chennai associate commissioner Anbu
பணி நிரந்தரம் வழங்கக் கூடாது என்பதற்காகவே எம்ஆர்பி
கடந்த 2016 ஆம் ஆண்டு,ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவ அடிப்படையில் நிரந்தரமாக்கப்படாத செவிலியர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கேட்டு போராடினர். அப்போது  பணி நிரந்தரம் வழங்குவதாக தமிழக அரசு ஒப்புக் கொண்டது. இப்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துதான் எம்ஆர்பி  செவிலியர்கள் போராடி  வருகின்றனர். 2016 -ல் போராடிய 3000  செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.
2016 -ல் போராடிய செவிலியர்களுக்கும், இப்போது போராடும் செவிலியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது, தற்போது போராடி வரும் செவிலியர்கள் அனைவரும் மருத்துவத் தேர்வு வாரியமான (Medical Recruitment  Board ) மூலமாகப் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்பதே ஆகும்.
 அன்று போராடிய செவிலியர்களுக்கு பணிக்கால அனுபவ அடிப்படையில்( Seniority basis) பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. அவ்வாறு நிரந்தரப் பணியில் செவிலியர்களை அமர்த்திவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது தமிழக அரசு.
 தற்காலிக பணியாளர்களாகவே வைத்துக் கொண்டு உழைப்பைச் சுரண்டும் நயவஞ்சக எண்ணத்துடன் செயல்பட்டுள்ளது தமிழக அரசும், சுகாதாரத் துறையும். அதாவது மருத்துவ தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) மூலம் செவிலியர்களைப் பணிக்கு அமர்த்தியதே, அவர்களை தற்காலிகப் பணியாளர்களாக வைத்துக் கொண்டு உழைப்பை சுரண்டவே.
போராடும் சனநாயக உரிமையை பறிக்கும் முயற்சி
ஒரு பக்கம், செவிலியர்களின் கோரிக்கைகளை கேட்கிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் DMS வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பூட்டி, போராடும் செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது  அரசு. அதோடு, செவிலியர்கள் போராடி வரும் DMS வளாகத்தில், பணிக்கு திரும்பிச் செல்லாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவிப்புப் பலகை வைத்துள்ளது தமிழக அரசின் சுகாதாரத்து துறை.
இரவு பகல் பாராமல், ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றும்
  • செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும். 
  • அதோடு, உரிய சம்பள உயர்வோடு கூடிய பணி நிரந்தரமாகும் ஆணையை வெளியிட வேண்டும். 
  • மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தற்காலிகப் பணியாளர்களாக அல்லாமல், நிரந்தர பணியாளர்களாகவே பணிக்கமர்த்த வேண்டும்.
  • பிற அரசுத் துறை பணியாளர்களை போல செவிலியர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கிடு!

எனத் தமிழக அரசிற்கு வலியுறுத்துவதுடன், செவிலியர்கள் போராட்டத்திற்கும் எமது இளந்தமிழகம் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.

வினோத் களிகை
செய்தி தொடர்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *