கந்துவட்டியை நிரந்தரமாகத் தடை செய்!

கந்துவட்டியை நிரந்தரமாகத் தடை செய்!

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி திரு. இசக்கிமுத்து, அவரது இணையர் லட்சுமியும் தங்களுடைய இரு மகள்களுடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர்.  லட்சுமியும், இரு மகள்களும் நேற்றே இறந்த நிலையில், இசக்கி முத்து இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார். இசக்கிமுத்து, லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் மதி சரண்யாவிற்கு ஐந்து வயது, இளைய மகள் அட்சய பரணிகாவுக்கு வெறும் மூன்று வயதுதான்.

மழலை மொழிகூட மறந்திருக்காத குழந்தைகளை நெருப்புக்கு இரையாக்கும் முடிவை இசக்கிமுத்துவும், லட்சுமியும் அவ்வளவு எளிதில் எடுத்திருக்கமாட்டார்கள். அவர்களை தீக்குளிக்கும் முடிவை நோக்கி தள்ளியது கிராமங்களிலும், சிறு, குறு நகரங்களிலும் லாபம் நிறைந்த கந்துவட்டி தொழில் மட்டும்தானா? என்றால், கண்டிப்பாக இல்லை.


தமிழ்நாட்டில் கந்துவட்டி தொழிலை தடை செய்வதற்கான சட்டம் 2003 – ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால், இந்த அரசு இயந்திரத்தால் நடைமுறைப்படுத்தாத சட்டங்களில் ஒன்றாகத்தான் கந்துவட்டி தடைச்சட்டமும் இருக்கின்றது.

தான் வாங்கிய 1 ,49 , ௦௦௦ ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும், 2 லட்சத்திற்கும் மேல் பணத்தைக் கட்டியுள்ளனர் இசக்கிமுத்துவின் குடும்பம். விவசாயம் பொய்த்து, கட்டிட வேலைக்கு சென்ற இசக்கிமுத்துவும், லட்சுமியும் பின்னர் திருப்பூர் சென்றும் தொடர்ந்து தங்களுடைய கடனைத் திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால், கந்துவட்டிக்கு கொடுத்தவர் மேலும் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்ட, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் இசக்கிமுத்து. கந்துவட்டிக்காரர்களோடு சேர்ந்து கொண்டு இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளது, கட்டப் பஞ்சாயத்து புகழ் காவல்துறை. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு புகார் மனுவுடன் ஐந்து முறை சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குடும்பத்துடன் தீக்குளித்துள்ளனர், இசக்கிமுத்துவும், லட்சுமியும். அதுவும் மாவட்ட ஆட்சியரின் ஒன்றுக்கும் உதவாத குறைதீர்ப்பு நாளன்றே, தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

அரசை எதிர்த்து கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் தைரியம் கொடுக்கின்றார்கள்? என்று கேட்பவர்கள் யாரும், சட்டத்தை மீறி அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் தைரியத்தை யார் உங்களுக்கு கொடுத்தது என்று கந்துவட்டிக்கு விடுவோரைப் பார்த்து கேட்பதில்லை. மக்களுடன் இணைந்து நின்று செயலாற்ற வேண்டிய காவல்துறையும், அரசு நிர்வாகமும் மக்கள் விரோதப் போக்கையே கையாள்கின்றன. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கோ தங்களது நாற்காலியை காத்துக் கொள்வதில்தான் மொத்த கவனமும் இருக்கிறது. நம்முடைய நாட்டில் என்றெல்லாம் சிக்கல் எழுகிறதோ, அப்போது மட்டும் ஒரு புதிய சட்டத்தை இயற்றிவிட்டு அமர்ந்துவிடும் அரசும், நிர்வாகமும் தான் இருக்கின்றது. இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலோ, மீறுபவர்களை தண்டிப்பதிலோ எந்த அக்கறையும் செலுத்தப்படுவதில்லை. மக்கள் விரோத திட்டம் தீட்டும் அரசை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசு, சட்டத்தை மீறி கந்துவட்டி வாங்கி எளிய மக்களை வஞ்சிப்பவர்களை கண்டும் காணாமல் இருக்கின்றது.

கந்துவட்டிக்கு எதிராக கேரளாவில் நடைமுறைப் படுத்திய ஆப்ரேசன் குபேரா போன்ற ஒரு அவசரகால நடவடிக்கையை உடனே அறிவித்து, தமிழ்நாடு முழுக்க கந்துவட்டித் தொழில் செய்வோர் அனைவரும் கைது செய்யப்படுவதும், கந்துவட்டிக்கு நிரந்தர தடைவிதிப்பதுமே இசக்கிமுத்து, லட்சுமி குடும்பத்திற்கும் வழங்கப்படும் நீதியாகும்.

தமிழக அரசே!

இசக்கிமுத்து, லட்சுமி குடும்பத்தின் கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர்கள், காவல்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட‌ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடு!

கந்துவட்டியை நிரந்தரமாக‌ தடை செய்! கந்துவட்டிக்கு கொடுப்பவர்களை உடனடியாக கைது செய்.

வினோத் களிகை
செய்தித் தொடர்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *