மேட்டூர் அணை – 10,000 கன அடி நீர் திறப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்

மேட்டூர் அணை – 10,000 கன அடி நீர் திறப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அண்மையில் பொழிந்து வரும் மழையினால் கர்நாடகாவில் அணைகள் ஏறக்குறைய முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் வடிகால் நீரும் தமிழ்நாட்டின் நீர்பிடிப்பு பகுதிகளில் பொழிந்து வரும் மழையினாலும் காவிரி பாசனத்தின் உயிர்நாடியாக உள்ள மேட்டுர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து 75 அடியை எட்டியுள்ளது.
குறுவை பொய்த்திட, இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் அணை 100 அடியை எட்டும் சம்பா சாகுபடிக்கான பணிகளை தொடங்கலாம் என காவிரிப் பாசன உழவர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், ”புஷ்பகர விழா” எனும் விழாவிற்கு நேற்று செப். 12 முதல் 10,000 கன அடி நீரை திறந்துவிட்டுள்ளது. இந்த விழா வரும் செப். 24 வரை நடைபெற உள்ளதால் 10,000 கன அடி தொடர்ந்து திறந்துவிடப்பட நேர்ந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். இதனால் செப்டம்பர் மாத இறுதியில் சம்பா சாகுபடிக்காக நீர் திறப்பு இருக்கும் என எதிர்பார்த்திருக்கும் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.
கடந்த ஆண்டு உழவுத் தொழில் பொய்த்ததால் ஏறக்குறைய 400 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே மேட்டூர் அணையின் நீரை பாதுகாத்து இந்த ஆண்டு சம்பா சாகுபடியை உறுதி செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசு உழவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் மத விழாவிற்காக 10,000 கன அடியை திறந்து விட்டிருப்பது உழவர்கள் நம்பிக்கையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
இந்த விழா இந்த நாளில் நடைபெறும் என்பது முன்னரே அறிந்திருந்தும் விழாவிற்காக கர்நாடக அணையில் இருந்து கூடுதல் நீரை கோராமல் அல்லது உழவர்களின் உயிர் ஆதாரமான மேட்டூர் அணை நீரை பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று ஏற்பாட்டை செய்யாமல் மொத்தமாக 10,000 கன அடி நீரை திறந்துவிட்டிருப்பது மறைமுகமாக உழவத் தொழில் பொய்க்கச் செய்யும் நோக்கமும், உழவர் தற்கொலையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகவும் நாம் கருத வேண்டியுள்ளது.
கடந்த 2016 -ம் ஆண்டு மகாமகத்தை ஒட்டி கணிசமான அளவு நீரை திறந்துவிட்டது தமிழக அரசு. இதே செப்டம்பர் மாதம்தான், காவிரி நதிநீர் சிக்கலில், கர்நாடக வாழ் தமிழர்கள் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாயினர். ஜூன் மாதம் சாகுபடிக்காக திறக்க வேண்டிய நீரையும் தமிழக அரசு அணைகளில் இருந்து திறக்கவில்லை.
 தமிழக விவசாயிகளுக்காக கர்நாடக அரசிடமும், இந்திய அரசிடமும் முறையிட்டு உரிய நதிநீரைப் பெறாத தமிழக அரசு, மத விழாவிற்கு என்று வரும் போது உயிர் ஆதாரமான நீரை திறந்துவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வுக்கு ஏன் விலக்கு கிடைக்கவில்லை என்பதற்கு உச்ச நீதிமன்றத்த தீர்ப்பை மீற முடியாது என்று கூறும் தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க மறுத்த பாரதீய சனதா கட்சியின் மோடி அரசும், காவிரி நதிநீர் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
Image result for mettur dam
வினோத் களிகை
செய்தி தொடர்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *