மாணவி அனிதாவின் தற்கொலைக்கு இந்திய, தமிழக அரசுகளே காரணம்!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் படித்து 1200 – க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதா, நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவக் கனவு மட்டுமின்றி, தமிழக மாணவர்கள் அனைவரின் மருத்துவக் கனவும் பொய்யாகிவிடும் என்று உணர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்.

நீட் தேர்வில் இருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைத்துவிடும் என்று தமிழக மாணவர் சமுதாயம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ” இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்துவிடும்” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் காட்டிய கண்ணாமூச்சி இன்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவி ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது.

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கன‌வைக் குழி தோண்டி புதைத்துவிட்டு இந்திய அரசும், தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நலன்களைக் காத்து நிற்காமல் பதவிப் பேரத்திலேயே ஆட்சியை நகர்த்தும் தமிழக ஆட்சியாளர்களும் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள், கூட்டுக் குற்றவாளிகள்.

நீட் தேர்வின் விளைவாக எதுவெல்லாம் நடக்கும் முற்போக்கு இயக்கங்களும், மாணவர் இயக்கங்களும் அரசுகளை எச்சரித்தனவோ அதுதான் இன்று நடந்துள்ளது. தலைமுறை, தலைமுறையாக மருத்துவத் துறையில் இருக்கும் பெற்றோர்களின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்புக்கு செல்கிறான். 1176 மதிப்பெண் பெற்ற, மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா, மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். எத்தனை பரப்புரைகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை ஊடக சந்திப்புகள் உணர்த்தாதை, ஆட்சியாளர்களுக்கு மாணவர்களின் மரணம் உணர்த்தும் என்று நாம் நம்பவில்லை. அதோடு, மருத்துவக் கனவு தவறியதற்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும் தமிழக மாணவர்களுக்கு  வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வினால் பாதிக்கப்படப் போகிற தமிழக மருத்துவத் துறை மற்றும் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை இந்து மக்களின் ஒரு துளி இந்த மரணம். இந்தப் படுகொலை எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளப்போகும் பெருந்துயரத்தின் முன்னறிவிப்பு என்பதை உணர்ந்து நம் செயல்பாட்டை துரிதப்படுத்துவோம்.

–ராசன் காந்தி-ஒருங்கிணைப்பாளர்–இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *