நீட் தேர்வு – மோடி அரசின் ஏமாற்று வேலையையும், சுயநல எடப்பாடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது.

தமிழகத்தில் அதிக அளவில் உள்ள மருத்துவ இடங்களை பறித்து மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கவும், தனியார்மயத்தை அமல்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டதே நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்து பழைய முறையை தொடர்வதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களையும், அரசு மருத்துவமனை கட்டமைப்பையும் நாம் முழுமையாக காப்பாற்ற முடியும். மேலும் நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் மருத்துவர்களாவதும் தடுக்கப்படுகின்றது.

இந்த நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் இந்த ஓராண்டு மட்டும் விலக்கு தருகின்றோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை அடுத்து தமிழக அமைச்சரவையால் அவசர சட்ட மசோதா ஆகஸ்டு 15 அன்று அனுப்பப்பட்டது. இந்த சட்ட முன்வரைவிற்கு மத்திய சுகாதாரம், மனித வள மேம்பாடு, சட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன.

நீட் தேர்விலிருந்து எப்படியும் இந்த ஆண்டிற்கு மட்டுமாவது, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருந்தனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இந்த ஆண்டே நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சார்பாகவும், மாநில வழி கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க‌ வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஒருபுறம் இந்த ஆண்டு விலக்கு தருகின்றோம் எனக் கூறிக்கொண்டே இன்னொரு புறம் விலக்கு கிடையாது எனக்கூறி தமிழக மக்களையும், மாநிலவழி கல்வியில் படித்த மாணவர்களையும் ஏமாற்றி உள்ளது மோடி அரசு. இதை எல்லாம் எதிர்த்து போராட வேண்டிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மோடியின் மனம் கோணாமல் தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலும், ஊழல் செய்வதிலும் மட்டுமே முனைப்பு காட்டுகின்றது. மக்களை வாட்டிவதைக்கும் எந்த பிரச்சனையையும் கண்டும் காணாமால் கள்ள மௌனம் காத்து வருகின்றது.நீட் தேர்வின் மூலம் மாநிலவழி கல்வியில் படித்த மாணவர்களை மருத்துவர்களாவதை தடுக்கும் மோடியின் மத்திய அரசையும், அவரின் ஏவலாட்களாக செயல்படும் தமிழக அரசையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது.

 

இந்தியாவில் எப்போதெல்லாம் சமூக நீதி மறுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதற்கு எதிராகத் திரண்டெழுந்த வரலாறு தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் உண்டு. நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தை வரலாறு காணத்தான் போகிறது.

பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகியன மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இடம்பெறச் செய்வதே, தமிழ்நாட்டின் மாநில உரிமையைப் பாதுகாப்பதோடு, தமிழக மக்களின் கல்வி உரிமைகளை மீட்டுக் கொடுக்கும்.

நீட் தேர்வை இளந்தமிழகம் எதிர்க்கும் அதே வேளையில் நீட் தேர்விற்கு எதிராக நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றது.

ராசன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *