ஆவணப்பட இயக்குநர் தோழர். திவ்யா பாரதியுடன் இளந்தமிழகம் இயக்கம் துணை நிற்கின்றது.

ஆவணப்பட இயக்குநர் தோழர். திவ்யா பாரதியுடன் இளந்தமிழகம் இயக்கம் துணை நிற்கின்றது.

தோழர்.திவ்யா எடுத்த கக்கூஸ் ஆவணப்படம் ஒரு குறிப்பிட்ட‌ சாதியினை கேவலப்படுத்துவதனால் அவர் மேல் வழக்கு தொடுக்கப் போகிறேன் என டாக்டர்.கிருஷ்ணசாமி கூறிய பின்னர் அவரின் ஆதரவாளர்கள் தினமும் தோழர்.திவ்யாவின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்து தரம் தாழ்ந்த வசவுகளை பேசியும், கொலை மிரட்டம் விடுத்தும் வருகின்றனர். இது முகநூலிலும் தொடர்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பலும் இந்த தொலைபேசி மிரட்டல் வேலைகளைச் செய்து வருகின்றது.

ஆவணப்படம் குறித்த ஏதேனும் அவருக்கு மாற்று கருத்தோ அல்லது அந்த ஆவணப்படத்தில் ஏதேனும் தவறான தகவலோ இடம்பெற்றிருப்பதாக கிருஷ்ணசாமி அவர்கள் கருதினால் அதை சரியான வழியில் எடுத்து காட்டியிருக்க வேண்டும் அல்லது சட்டத்திற்கு உட்பட்ட வகையில் நடந்திருக்க வேண்டும். இது போன்ற அடியாள் பாணி மிரட்டல்கள் மிக மோசமான முன்னுதாரணமாகும்.

ஒடுக்கப்பட்டவர்களின் மிக மோசமான ஒடுக்குமுறையான மனிதக்கழிவுகளை மனிதர் அள்ளும் அவலத்தை அவர்களின் விடுதலைக்காக அன்றி வேறு எந்த உள்நோக்கமும் இல்லாது ஆவணப்படுத்தியவர் தோழர் திவ்யா பாரதி. இதில் அவலமான செய்தி என்னவென்றால் ஆவணப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரின் விடுதலைக்கும் சேர்த்தே அவரது ஆவணப்படம் குரல் கொடுக்கிறது.

டாக்டர்.கிருஷ்ணசாமி, அவரது ஆதரவாளர்களின் தரம் தாழ்ந்த செயல்பாட்டை இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. இந்த போராட்டத்தில் தோழர்.திவ்யாவுடன் இளந்தமிழகம் இயக்கம் துணை நிற்கின்றது.

மாஞ்சோலை போராட்டத்தை முன்னின்று நடத்திய கிருஷ்ணசாமி அவர்கள் இன்று தமிழகத்தில் பா.ஜ.க-வின் பல்லக்கை தூக்கும் முதல் ஆளாக செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார். அதனால் தான் அவரால் இட ஒதுக்கீடு கூடாது என்றும், நீட் தேர்வு வேண்டும் என்றும் சமூக நீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடிகின்றது.

அச்சமூகத்தின் உரிமைகளை பாசிசத்தின் கையில் அடகு வைக்கும் ஒரு கட்சித் தலைவரின் கடை மட்ட வால்களாக (வாள் அல்ல) செயல்படுபவர்களின் இந்த நடவடிக்கைகளால் அச்சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை.

வினோத் களிகை
செய்தி தொடர்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *