பொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக‌ மனித உரிமை ஆணையத்திற்கு மனு

பெறுநர்:
மத்திய & மாநில மனித உரிமை ஆணையம்

அனுப்புநர்:

இளந்தமிழகம் இயக்கம்

சென்னை.

குறிப்பு:- பொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக.

தமிழகத்தில் பொதுமக்கள் வாழ்வாதராத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பது, அணு உலை அமைப்பது, அரசின் டாஸ்மாக் திறப்பது என‌ தொடர்ச்சியாக மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, இதனால் பாதிக்கப்படும் மக்கள், இந்த திட்டங்களுக்கு அமைதியான முறையில் சிறு அளவில் எதிர்ப்பு தெரிவிதால் கூட, கடுமையான, விசாரணைக்குக் கூட‌ வாய்ப்பற்ற குண்டர் சட்டங்களை  மக்களின் மீது ஏவி மத்திய-மாநில‌ அரசு சிறையில் அடைக்கிறது.

சேலம் மாவட்டம் வீமனூரை சேர்ந்த மாணவியான வளர்மதி(23) , சேலம் அரசு மகளிர் கல்லூரி முன்பு, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரம் வழங்கினார், என 12-07-2017 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்துறையால் 17-07-2017 அன்று குண்டர் சட்டத்தின்(தமிழ் நாடு சட்டம் 14/1984) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஈழத்தில் 2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக இலங்கை இனவெறி இராணுவத்தால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர். கடுமையான சட்டங்கள் மூலம் கைது செய்கின்றனர்.

சென்னை மெரினாவில்  மே 21 ந்தேதியன்று முள்ளிவாக்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு  இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருந்தது காவல்துறை.  அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில்(தமிழ் நாடு சட்டம் 14/1984) தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கும் வழக்கு இது.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், வனதுர்க்கையம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளிகளின் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய், எரிவளிக் குழாய்களில் , 30 -06 -2017 அன்று  வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும், எரிவளியும் கசியத் தொடங்கின. வயல்களில் வெளியேறிய எண்ணெயும், வளியும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனால் அச்சமடைந்த கிராமத்து மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து கூடியிருந்தனர். எரிவளிக் குழாய் கசிவுகள் தொடர்பாக விசாரிக்க வந்த, காவல் துறை அதிகாரிகளிடமும், வருவாய் துறை அதிகாரிகளிட‌மும், அடிக்கடி ஏற்படும் எரிவளிக் குழாய் கசிவுகள் குறித்தும், தீப்பிடித்து எரியும் வயல்வெளிகள் குறித்தும் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை, மற்ற எவரும் வயல்வெளிகளை பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என்று முற்றுகையிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் வராமலேயே, கதிராமங்கலம் கிராமத்து மக்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அதிகாரிகள் பார்வையிட முயன்றுள்ளனர். அந்த சமயத்தில், சாலைகளில் கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. அதையே காரணமாக்கி, பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையினர் கதிராமங்கலம் கிராமத்து மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

கதிராமங்கலத்தில் நிலவும் சூழல் பற்றி அறிந்து கொள்ள அங்கு சென்றிருந்த பேராசிரியர் த. செயராமன், க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் உள்ளிட்ட‌ 9 பேரின்  மீதும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் (CR 126/17, 147. 148, 1294 CB, 341, 323, 336, 353, 436, 506 (2), 307, இ தா 23 (1) TNPA 1 ) வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். பிணையில் வருவதற்கு காவல்துறையும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் அனுமதி மறுக்கிறது. இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்.

எந்த வன்முறையும் அற்ற அமைதியான போராட்டங்களை கூட‌ குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களைக்கொண்டு அரசு ஒடுக்குகிறது. 1982-ல் கொண்டுவரப்பட்ட குண்டர் சட்டத்தில். ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்று நீளும் இந்தச் சட்டத்தை மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது திணித்து அடக்குமுறையில் ஈடுபடுகிறது அரசு

மேலும் தமிழக அரசால் நினைத்த மாதிரி குண்டர் சட்டத்தை கையாள முடியாமலிருந்ததால். குண்டர் சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டு வந்தார்கள். கேள்விக்கிடமற்ற வகையில், விவாதங்களுக்கு இடமில்லாத வகையில் வெளியிடப்படும் விதி எண் 110-ன் கீழ் 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து அமலாக்கினார்கள். இந்த திருத்தத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சட்டம் பல நிபந்தனைகளை விதிக்கிறது.அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம் என்பது (குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவு 2(f)). அந்த நிபந்தனையைத் தான் அரசு நீக்கியிருக்கிறது. தற்போது ஒரு புதிய குற்றம் புரிந்தால் கூட குண்டர் சட்டம் என்பதுதான் புதிய திருத்தம்.

எனவே அமைதி வழியில் போராடும் மாணவி மற்றும் மக்கள் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ், மனித உரிமைகளுக்கு எதிரானது அதை ரத்து செய்ய வேண்டும், மேலும் வளர்மதி, திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது பதியப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும், பேராசிரியர் ஜெயராமன்  மற்றும் கதிராமங்கலம் ஊர் மக்களின் மேல் பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் ரத்து செய்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உதரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

valarmathi1

jayaraman-kathiramangalam

NHRC


HR Petition Tamil-1HR Petition Tamil-2HR Petition Tamil-3HR Petition English-1HR Petition English-2

Online Petition : – https://www.change.org/p/human-rights-campaign-regarding-arrest-of-common-people-students-and-social-activists-on-repressive-goondas-act

இங்கனம்,

ஒருங்கிணைப்பு குழு

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *