ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – அரங்கக் கூட்டம் செய்தியறிக்கை

ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி புதிய இந்தியா பிறந்து விடுமா என்கிற தலைப்புகளில் ஜூலை 15 2017 அன்று இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்த அரங்கக் கூட்டம் பெரியார் திடலில் நடைபெற்றது. மத்திய அரசின் ஒற்றை வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி குறித்தும்,  அநீதியான மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் குறித்தும், இந்தி திணிப்பு, ஒற்றை மைய ஆதிக்கம் குறித்தும் பேசுவதற்காக சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
20046309_1589486811075260_5035643311842689597_n
மருத்துவர் எழிலன், நீட் என்கிற தேர்வு முறை எப்படி நம் மண்ணின் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்க விருக்கிறது என்பது குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். சாதாரண மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பிக்கத் தெரியாத கிராமங்களைக் கொண்ட நம் நாட்டில், நீட் தேர்வுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொல்லும் மத்திய அரசு,  தனது 15 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட நிர்மாணிக்கத் துப்பில்லாத மோடி அரசு,  இத்தனை ஆண்டு காலம் தமிழகம் உருவாக்கிய மருத்துவக் கல்வித் துறையை அபகரிக்க முயல்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெறாத நம் மாணவர்களை விட, நீட் தேர்வுக்கே விண்ணப்பிக்காத மூன்றரை லட்சம் மாணவர்களின் நிலை குறித்தும் பேசினார். அவர்களனைவரும் நீட் தேர்வு வராது என்கிற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போய் விட்டார்கள் என்றார். இது மிகப்பெரிய துரோகம் என்று எடுத்துரைத்தார்.
20046320_1590940220929919_512441726929865424_n
நக்கீரன் இதழ் பொறுப்பாசிரியர் தோழர் கோவி.லெனின் அவர்கள் மத்திய அரசின் இந்தி திணிப்பு குறித்து பேசும் போது,இந்தி தேசிய மொழி என்கிற பொய் பரப்புரையை முதலில் உடைக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக தற்போது இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் சூழலைத் தகர்த்து, தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்க நம் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இளந்தமிழகம் போன்ற அமைப்புகள் இந்தி தவிர்த்த நாட்டின் பிறமொழி உணர்வாளர்களை ஒருங்கிணைத்து இதை சாத்தியமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
20046354_1590060084351266_2962138232005848929_n
முனைவர் வித்யாசாகர் ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி விதிப்பு முறை மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும், மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்றும் தனது உரையைத் தொடங்கினார். மாநில அரசு ஒரு வரியை விதிக்க திட்டம் போடும் போது, இனி ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் போய் அனுமதி பெற்ற பின்னரே அதைச் செயல்படுத்த முடியும் என்றும் இப்பேற்பட்ட அவலநிலையை நாம் எதிர்த்து போராட வேண்டுமே தவிர,  தனித்தனியாக வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று போராடக் கூடாது என்றும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
19989546_1590139024343372_5360775444106205290_n
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தோழர் க.அருணபாரதி “இந்துத்துவா” என்கிற பெயரில் காங்கிரஸ் பா.ஜ.க அரசுகள் செய்வது , உண்மையல்ல. அவர்கள் பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இதை ஆரிய இனவாதம், ஆரியத்துவா என்று தான் அழைக்க வேண்டும் என்று பேசினார்.
20106665_1590940270929914_5284393328437252289_n
நிறைவுரையாக, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி பா.ஜ.க அரசின் பொருளாதாரத் தோல்விகளையும் மோசடி ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். தமிழக இளைஞர்கள் உதிரிகளாக இல்லாமல், அமைப்பாக வேண்டிய அவசியத்தையும், அறிவுத்தளத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தனது கருத்துகளை முன் வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மறைந்த தோழர்கள் ஓவியர்.வீரசந்தானம், கோவை ஈஸ்வரன், தோழர் ஞானய்யா அவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி முழுவதையும் தோழர் அ.மு.செய்யது தொகுத்து வழங்கினார்.
20106394_1590940290929912_4303746244803159254_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *