ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு ‘இளந்தமிழக இயக்கம்’ சார்பாக வீரவணக்கங்கள்.

தமிழ் தேசிய உணர்வாளரும், ஈழ ஆதரவாளருமான, களப்போராளி “ஓவியர் வீரசந்தானம்” அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் தனது 71-வது வயதில் உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வந்த “ஓவியர் வீரசந்தானம்” நேற்று உயிரிழந்தார். களப்போராட்டங்களில் பங்குப்பெற்ற தோழர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான முகம். தன் இறுதி மூச்சு வரை அதிகாரவர்க்கத்தையும், ஆதிக்கத்தையும் மிக கடுமையாக எதிர்த்துப் போராடியவர். குறிப்பாக ஈழ ஆதரவு போராட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் கலந்து கொண்டு தன் ஈழ ஆதரவை வெளிப்படையாய் தெரிவித்தவர். தீவிர தமிழ் தேசிய உணர்வாளரும் கூட. நான் கலந்து கொண்ட அனைத்து போராட்டங்களிலும் மக்களோடு மக்களாக கலந்து கொண்டவர்.மிக எளிமையான மனிதர். தீவிர உடல்நலப் பிரச்சனைகளோடு போராடி வந்தபோதும், தொடர்ந்து போராட்டக்களங்களில் கலந்துகொண்டவர்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது இளந்தமிழகம் இயக்கம் சார்பாக அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அணு ஆற்றலின் விளைவுகளை விளக்கும் ஓவியங்களை கொண்ட ஓவியக் கண்காட்சியினை சென்னையில் ஒருங்கிணைந்திருந்தோம். இதில் ஐயா வீரசந்தானம் அவர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு மேலும் பல ஓவியர்கள் அணு உலைக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட முன் உதாரணமாக செயல்பட்டார்.
veera
தானே புயலால் பெரும் சேதமடைந்த கடலூர் மாவட்டத்தின் பல சிற்றூர்களில் மக்கள் உணவு குடிநீருக்காக போராடிக் கொண்டிருந்த பொழுது களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சென்று சேர பெரும் உதவிகளை மேற்கொண்டிருந்தார்.
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைய மிக முக்கியக் காரணமாக இருந்தவர். அங்கே உள்ள ஓவியங்கள்/சிற்பங்கள் ஆகியவற்றை முன்னின்று வடிவமைத்தவர். நினைவு முற்றம் திறந்து 3 நாட்களுப்பின் நான் அங்கே சென்றபோது ஐயா-வை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மற்ற நண்பர்களுக்கும், எங்களுக்கும் அங்கே உள்ள ஓவியங்கள்/சிற்பங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இந்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
ஓவியக் கலைஞராகவும், மக்களின் போராளிகாவும் வாழ்ந்து வந்த ஐயா அவர்களின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு!
ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு ‘இளந்தமிழக இயக்கம்’ சார்பாக வீரவணக்கங்கள்.
இளங்கோவன். ச
இணையதள செய்தி தொடர்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *