மாநில வருவாயை ஒழிக்கும் GST வரிவதிப்பை இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது !

ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு என்று சொல்லி சனநாயக விரோதமாக, வேற்றுமைகளை அழிப்பதன் தொடர்ச்சியாக GST எனும் பெயரில் – மாநில வருமானத்தை ஒழித்துக்கட்டி ஒற்றை வரி விதிப்பை கொண்டுவந்துள்ளது  இந்திய ஒன்றிய அரசு.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு மாறாக சாதாரணக் குடும்பத்தின் வருமானத்தையும், சேமிப்பையும் பிடுங்க வந்துள்ளது இந்திய ஒன்றிய அரசின் GST எனும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிவிதிப்பு.

இந்த வரி ஏய்ப்பு சாமானியர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பை வழங்கவோ, அழிந்து வரும் வேளாண்மையை காக்கவோ, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவோ பயன்படப் போவதில்லை, மாறாக கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களின் மானியங்களுக்கும் இலட்சம் கோடிகளில் கடன் தள்ளுபடிக்கும் தான் பயன்படுத்தப் போகிறது இந்த அரசு என்பது வெளிப்படை.

ஒற்றை இந்தியா – ஒற்றை வரி என்கிற நூதன நுட்பமான டிஜிட்டல்ஊழலை எதிர்ப்போம். தற்சார்பு பொருளாதாரத்தையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும், ஹைட்ரோ கார்பன் அணுஉலை என்று இயற்கையை அழிக்காமல் வேளாண்மையைக் காக்கும்படியான திட்டத்தையும் தமிழ் நாட்டில் உருவாக்கும் முயற்சிகளில் இறங்குவோம்.

மாநில உரிமைகளை குழி தோண்டிப் புதைக்கும் விதமாக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் பாரதீய சனதா கட்சி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, மோடி மற்றும் அமித் ஷாவின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கேட்க  வக்கற்ற அரசாக இருக்கிறது.

மக்கள் போராட்டங்கள் இல்லாமல் மாநில உரிமைகள் சாத்தியமாகாது; மாநில மக்களின் உற்பத்தி, தேவை, சலுகை காட்ட வேண்டியற்றை மாநில அரசால் மட்டுமே எளிதாக புரிந்து கொள்ள முடியும். எனவே இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டிக்கும் ஒவ்வொரு சனநாயக அமைப்புகளுடனும் இளந்தமிழகம் இயக்கம் கைகோர்த்து நிற்கும். பாரதீய சனதா தலைமையிலான இந்திய அரசை கண்டிப்பதோடு, அதற்கு உடந்தையாக மாநில உரிமைகளை காவு கொடுக்கும் தமிழக அரசையும் இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

– இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *