கதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரசு வன்முறையை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது !

 

 

கதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள‌ அரசு வன்முறையை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது !

 

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், வனதுர்க்கையம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளிகளின் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய், எரிவளிக் குழாய்களில் , 30 -06 -2017 அன்று  வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும், எரிவளியும் கசியத் தொடங்கின. வயல்களில் வெளியேறிய எண்ணெயும், வளியும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

 

இதனால் அச்சமடைந்த கிராமத்து மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து கூடியிருந்தனர். எரிவளிக் குழாய் கசிவுகள் தொடர்பாக விசாரிக்க வந்த, காவல் துறை அதிகாரிகளிடமும், வருவாய் துறை அதிகாரிகளிட‌மும், அடிக்கடி ஏற்படும் எரிவளிக் குழாய் கசிவுகள் குறித்தும், தீப்பிடித்து எரியும் வயல்வெளிகள் குறித்தும் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை, மற்ற எவரும் வயல்வெளிகளை பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என்று முற்றுகையிட்டுள்ளனர்.

 

மாவட்ட ஆட்சியர் வராமலேயே, கதிராமங்கலம் கிராமத்து மக்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அதிகாரிகள் பார்வையிட முயன்றுள்ளனர். அந்த சமயத்தில், சாலைகளில் கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. அதையே காரணமாக்கி, பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையினர் கதிராமங்கலம் கிராமத்து மக்களை காட்டுமிரான்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

 

அதிகாரிகளிடம் முறையிட்டுக் கொண்டிருந்த கிராமத்து மக்கள், தாங்கள் தீ வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். காவல்துறையினரோ மக்கள்தான் சாலையில் தீ வைத்தனர் என்று தெரிவிக்கின்றனர். தீ வைப்பதில் தமிழகக் காவல்துறையினர்  எவ்வளவு கை தேர்ந்தவர்கள் என்பதை மெரினா சல்லிக்கட்டு போராட்டத்தின் போதே நாம் அறிந்திருக்கிறோம். எனவே, காவல்துறையினர் தீ வைத்திருக்கமாட்டார்கள் என்று கூறுவதும் இயலாதது.

 

என்ன நடந்தது என்பது பற்றி அறிவதற்கான முயற்சிகளை எடுக்காத காவல் துறையினர், உடனடியாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த கிராம மக்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்தி, மக்களை அந்த இடத்தைவிட்டு விரட்டியுள்ளனர். இதில், சாந்தி, தேன்மொழி, பழனியம்மாள், சசி ஆகிய பெண்களை நடுரோட்டில்  வைத்து, காவல்துறையினர் கடுமையாகக் தாக்கியுள்ளனர். இக்காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

உண்மை அறிய முயற்சி எடுக்காத காவல்துறை மக்களை அந்த இடத்தில் இருந்து விரட்ட வேண்டும் எனும் நோக்கோடு இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. கதிராமங்கலத்தில் நிலவும் சூழல் பற்றி அறிந்து கொள்ள அங்கு சென்றிருந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் த.செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் ஆகியோர் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்கள் கல்லடிபட்டு இரத்தக்காயம் அடைந்துள்ளார்.

 

 

பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் மற்றும்  பெண்கள் – சாந்தி, தேன்மொழி, பழனியம்மாள், சசி உள்ளிட்ட 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பின்னர், நான்கு பெண்களையும் காவல் நிலையத்திலேயே விடுவித்துவிட்டு, மற்ற 9 பேரின்  மீதும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் (CR 126/17, 147. 148, 1294 CB, 341, 323, 336, 353, 436, 506 (2), 307, இ தா 23 (1) TNPA 1 ) வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் அனைவரும் உண்ணாநிலையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சாலையில் கிடந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்த காரணம் பற்றி காவல்துறை விசாரிக்கட்டும். ஆனால், கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் வயல்வெளிகள் தீப்பிடித்து எரிவதற்கு காரணம், இந்திய ஒன்றிய அரசும், ONGC திட்டத்தை வாய் மூடி ஆதரிக்கும் தமிழக அரசும்தான். எப்போதெல்லாம், அறிவியல் அடிப்படையிலான திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அப்போது எல்லாம், மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறும் அறிவாளிகள் நம்மூரில் உண்டு. ஆனால், மீத்தேனுக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் எந்த அச்சத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களோ, அதுதான் இன்று கதிராமங்கலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு காலங்காலமாக சோறு போட்ட தஞ்சை மண், நஞ்சை வயல்கள் இன்று தீப்பிடித்து எரிகின்றன‌.

 

ONGC குழாய்கள் பதிப்பதை எதிர்த்து போராடிய மக்களை துச்சமென மதித்து, கடந்த சூன் 2 – ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து, ONGC – நிர்வாகத்தினரால் புதிய ஆழ்குழாய் அமைக்கப்பட்டது. அதை மக்கள் எதிர்த்தனர். அப்பொழுதும் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 10 பேரை பிணை மறுப்புப் பிரிவில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

 

கடந்த ஜூன் 27,  2014 அன்று ஆந்திராவில், கெயில் நிறுவனத்தால் பதிக்கப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட கசிவினால் நிகழ்ந்த பெருவிபத்தில் இருந்து,  இந்த அரசுகள் எதனையும் உணர்ந்து கொண்ட‌தாக தெரியவில்லை.

 

தொடர்ந்து, சிக்கல்களும் நெருக்கடிகளும் சூழ்ந்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும் எரிவளியும் வெளியேறுகிறது. மக்கள் பீதியடைந்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள். என்ற தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. தமிழக அரசு மேலும் கால தாமதப்படுத்தாமல் சீராய்ந்து உரிய தீர்வுகளை கண்டறிய வேண்டும். போராடும் மக்களை ஒடுக்குவதல்ல அரசின் வேலை, போராடும் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனடியான தீர்வுகள் நோக்கி நகர வேண்டும். போராடும் விவசாய மக்களின் பிரச்சினை என்பது அந்தப் பகுதி மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினை.

 

பிணை மறுப்பில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்களை உடனே விடுதலை செய்வதோடு, வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அறவழியில் போராடிய மக்களின் மீது தாக்குதல் நடத்திய‌ காவல் துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *