தமிழக அரசே ! ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய தோழர்களை விடுதலை செய் !

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தின் விளைநிலங்களில்  ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் பணிக்கு எதிராக போராடிய பேராசிரியர் த.செயராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  இப்போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக கதிராமங்கலம் கிராமம் நோக்கி, குடந்தை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனும் கைது செய்யப்பட்டு நேற்று(ஜீன் 4) இரவு மீண்டும் இந்த கிராமத்திற்கு வரக்கூடாது என்ற நிபந்தனையில் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் கதிராமங்கலம் கிராமம், அதைச் சுற்றிய பகுதிகள் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரிப்படுகை வேளாண் நிலங்களில் ஏற்கெனவே ஒ.என்.ஜி.சி எண்கு வ‌ணெய் நிறுவனம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வளமான மண்ணில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தின் எண்ணெய் கலந்து மண்வளம் பாழடைந்து வருகிறது.  காவிரி நதிநீர் உரிமை பறிப்பு, மீத்தேன் திட்டம், இறால் குட்டை வளர்ப்பு என காவிரிப் படுகை தொடர்ந்து பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே நஞ்சாகிப் போன நிலங்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டையும் நிவாரணத்தையும் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒ.என்.ஜி.சி நிறுவனம், தற்போது மேலும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில்,  “மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பும்” கலந்து கொண்டது. கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் த.செயராமன் உட்பட 11 தோழர்கள் இப்போராட்டத்தின் போது, தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரின் மீதும் பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயத்தை முற்றாக அழித்து, பெருமுதலாளிகளின் இலாப நலன்களுக்கு துணை செய்யும் மத்திய மாநில அரசுகளின் போக்கை எதிர்த்து, அறவழியில் போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை, இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அண்மை காலங்களில்,  மத்திய மாநில‌ அரசுகளை எதிர்த்து போராடும் சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, கடுமையான வழக்குகளில் அவர்களை சிறையிலடைப்பதன் மூலம்,  அநீதியை எதிர்த்து போராடும் மக்களை ஆளும் வர்க்கம் அச்சுறுத்தப் பார்க்கிறது. தமிழக அரசு மத்திய அரசின் ஏவல் ஆளாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. அநீதியான இந்தப் போக்கை கண்டித்தும், கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்கக் கோரியும், தமிழகத்தின் அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட இளந்தமிழகம் இயக்கம் வலியுறுத்துகிறது.

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *