மே 17, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மே 17 இயக்கம், தமிழர் விடியல்  கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக சிங்கள இனவெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இங்கே இந்தியாவில் இருந்த மத்திய, மாநில அரசுகள் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக கடுமையான அடக்குமுறைகள் மூலம் தன்னெழுச்சியான‌  போராட்டங்களை ஒடுக்கின, இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்தும் காப்பாற்றின‌. போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர். கடுமையான சட்டங்கள் மூலம் கைது செய்கின்றனர்.

சென்னை மெரினாவில்  மே 21 ந்தேதியன்று முள்ளிவாக்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு  இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருந்தது காவல்துறை.  தற்போது (29-05-2017) அவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். திருமுருகன், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கும் வழக்கு இது. ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் இன்னமும் இணைந்து செயல்படுவதையே இந்த அடக்குமுறை கைதுகள் வெளிக்காட்டுகின்றன.

மேலும் பா.ச‌.க‌ அரசு தொடந்து மக்களுக்கு எதிராக செயல்படுத்துவதற்கு தமிழ் நாட்டில் எழும் தன்னெழுச்சியான போராட்டங்களை தடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை மிரட்டவுமே இது போன்ற கடுமையான அடக்கு முறை சட்டங்களை தோழர்கள் மீது இந்த அரசுகள் ஏவியுள்ளன.

தோழர்கள்களை நீதியற்று கைது செய்துள்ள‌ அதிமுகவின் எடப்பாடி அரசையும், அதிமுகவை கைப்பாவையாக வைத்து தமிழர்களின் போராட்டத்தை நசுக்கும் மத்திய பா.ச‌.க‌ மோடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த ஒரு நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

போராடும் தமிழர்களை மிரட்டுவதை விட்டுவிட்டு,  இலங்கை புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வுக்கும், பொதுவாக்கெடுப்பு மூலம் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா அரசு அனைத்துலக மன்றங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இளந்தமிழகம் இயக்கம் வலியுறுத்துகின்றது.

ஒருங்கிணைப்பு குழு

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>