பாபா சாகேப் அம்பேத்கர் முன் வைக்கும் சனநாயகம் – அரங்கக் கூட்டம் நிகழ்வறிக்கை

    அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்த, “பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் சனநாயகம்” என்கிற தலைப்பில் அரங்கக் கூட்டம் 22 ஏப்ரல் 2017  அன்று நடைபெற்றது.

அரங்கு நிறைந்த கூட்டமாக அமைந்த நேற்றைய நிகழ்வில், நீதியரசர் அரி பரந்தாமன், பேராசிரியர் நாகநாதன், வழக்கறிஞர் சரவணன், தோழர் ஆளுர் ஷாநவாஸ், தோழர் நற்றமிழன், தோழர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

WhatsApp Image 2017-04-23 at 6.54.59 AM

வழக்கறிஞர் தோழர் சரவணன்,  அம்பேத்கர் எத்தகைய கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்து சிவில் சட்டம் கொண்டு வர போராடினார் என்பது குறித்த ஒரு ஆய்வுரையை வழங்கினார். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் (1840 களிலிருந்து 1947வரை)இந்து பார்ப்பனர்களால் முன் வைக்கப்பட்ட “ஜெண்ட்டூ”சட்டத்தின் (Gentoo code) அம்சங்களைப் பார்க்கும் போது,  ஆதிக்கசாதி பெண்களாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்தாலும் , அவர்கள் சட்டத்தின் படியே எத்தகைய இழிவான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டினார்.  அம்பேத்கர் முன் வைக்கும் சனநாயகமானது அரசியல் தளத்தில் இல்லாமல், அது சமூக தளத்தில் இருந்தது மேலும் சனநாயகமானது சக மனிதன் மீதான மதிப்பும் மரியாதையுமே ஆகும் என்கிற அம்பேத்கரின் கருத்தியலை வரலாற்றுத் தரவுகளோடு ஆணித்தரமாக பதிவு செய்தார் தோழர் சரவணன்.

பேராசிரியர் நாகநாதன் ஆற்றிய உரையில்   பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணப் பொருளாதாரம் (Provincial Finance in British India) என்ற அவரது பொருளாதார முனைவர் பட்டத்திற்கான ஆய்வு கட்டுரையை 1917ல் கொலம்பியா பல்கலைகழகத்தில் எழுதினார். இந்த கட்டுரை மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் பொருளாதார உறவு எப்படி இருக்க வேண்டும் என விளக்கியது. “ரூபாயின் சிக்கல்கள் –  காரணமும், தீர்க்கும் வழிமுறைகளும்” ( The Problem of the Rupee: its origin and its solution) என்ற அம்பேத்கரின் பொருளாதார ஆய்வு நூலை  London School of Economicsல்  D.Sc. degree படிக்கும் பொழுது 1921ல் எழுதினார். இந்த நூலின் அடிப்படையிலேயே ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ரிசர்வ் வங்கியை உருவாக்கினார்கள் என்பதை ப‌கிர்ந்து கொண்டார். ஒரு பஞ்சமர் எப்படி இந்துச் சட்டத்தை எழுதலாம் என எதிர்த்தவர்கள், இன்று ஒரு புதிய தொழில் நுட்பத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்கிறார்கள். உலகில் இந்தியாவை விட சமூக நீதியைப் புறக்கணிக்கும் நாடு வேறு ஏதும் இருக்கிறதா? என்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வியையும் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த மட்டில், வர்க்கம் மட்டுமல்ல, வர்க்கத்தை விட சாதியே முன்னணியில் இருக்கிறது என்கிற கருத்தில் அம்பேத்கர் உறுதியாக இருந்ததையும் பேரா.நாகநாதன் தனது உரையில் பதிவு செய்தார். அதே போல அம்பேத்கர் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரித்தவரல்ல, சோசலிச பொருளாதாரத்தை ஆதரித்தவர் என்றும் கூறினார்.

WhatsApp Image 2017-04-23 at 6.59.58 AM

“முஸ்லிம்கள் பார்வையில் அம்பேத்கர்” என்கிற தலைப்பில் பேசிய வி.சி.க துணை பொதுச் செயலாளர் தோழர் ஆளுர் ஷா நவாஸ்,  வெகுமக்கள் மத்தியில் அம்பேத்கர் ஒரு தலித் தலைவராக மட்டும் பார்க்கப் படும் அவல நிலையை எடுத்துரைத்தார். அம்பேத்கர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களை விட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே அதிகம் நன்மைகளை விளைவித்திருக்கிறது ஆனால் அம்பேத்கரின் பங்களிப்பை பிற்படுத்தப்பட்ட மக்கள் மறந்து விட்டார்கள் . இன்று இத்தனை ஆண்டுகள் இந்திய அரசியலமைப்பில் இருக்கும் “மதச்சார்பின்மை” என்கிற கருத்தியலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர் தான். அக்கருத்தியல் தான் இன்று சிறுபான்மையினரை பாதுகாத்து வருகிறது. ஆனால் சிறுபான்மையினருக்கு அம்பேத்கர் குறித்து எந்த பார்வையும் இல்லை என்றும்,  அம்பேதகர் கொண்டு வந்த இந்து சிவில் சட்டம் ஆதிக்க சாதி பெண்களுக்கும் சேர்த்து விடுதலை  பெற்றுத் தந்தது என்ப‌தையும் பதிவு செய்தார்.  தோழர் ஷாநவாஸ்.நாம் தொடர்ந்து அரசியல் தெரிந்த இயக்கங்களுக்கு மத்தியில் பேசிக் கொள்வதும் சித்தாந்தச் சண்டை போட்டுக் கொள்வதுமாக தொடர்ந்து ஒரு வட்டத்துக்குள் சுருங்கிக் கட்டுண்டு கிடக்கிறோம். இந்நிலை மாறி,  நாம் வெகுமக்கள் மத்தியில் போய் பேச வேண்டும்.  வெகுமக்களிடம் நம் அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தினார்.

WhatsApp Image 2017-04-23 at 6.59.17 AM

அடுத்து பேசிய நீதியரசர் அரி பரந்தாமன், வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் முதலாளித்துவ நிறுவனங்கள் உள்ளே நுழைந்த போது தான், சாதிய எதிர்ப்பு உணர்விற்கான பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்பட்டது என்ற‌ கருத்தை பகிர்ந்து கொண்டார். நிலவுடமைச் சமூகத்தில் வேரூன்றிய சாதி, மன்னராட்சி காலத்தில் இறுகிப் போனதையும், அம்பேத்கர் தான் இந்துவாக பிறந்து விட்டேன், நான் ஏன் இந்துவாக சாக மாட்டேன் என்று பேசிய ஒரு கூட்டத்தின் உரையையும் சுட்டிக் காட்டினார்.  இந்து மதத்திலிருந்து மதம் மாறுபவர்கள், தங்கள் சாதிய அடையாளத்தை இன்னும் சுமக்கிறவர்களாக இருக்கிற அவலத்தையும் பதிவு செய்தார்.  அம்பேத்கருக்கு முன்பிருந்த கால கட்டம் எப்படி இருந்தது.  உடைகளை அணிந்ததற்காக, செம்பு பாத்திரங்களை பயன்படுத்தியதற்காக, காலில் செருப்பு அணிந்து சென்றதற்காக தலித்துகள் அடித்து துன்புறுத்தப்பட்ட வரலாற்றை அம்பேத்கர் பதிவு செய்திருந்ததையும், 1912 இல் துவங்கப்பட்ட சென்னை பி & சி மில்லில் சாதிக்கொரு குடிநீர் பானை வைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் தோழர் அரி பரந்தாமன் பதிவு செய்தார்.

WhatsApp Image 2017-04-23 at 6.59.44 AM

தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர் தோழர் இளையராசா,  இன்றைய கல்வி நிலையின் அவல நிலை குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். கல்விக்கு எந்த தொடர்பும் இல்லாத ஸ்மிருதி இராணி அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, தலித்துகளுக்கு எதிராக நடக்கும் நிறுவனப்படுகொலைகளைச் சாடி பேசினார்.  ரோகித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்ற சமூகப் போராளிகள் கூட கல்வி நிலையங்களில் நடக்கும் சாதிய கொடுமைகளைக் கண்டு பொறுக்கமுடியாமல், தற்கொலை செய்து கொள்ளும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் சூழல் தொடர்வதாக வேதனைகளை வெளிப்படுத்தினார்.  உ.பி மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் காவி யோகி ஆதித்யநாத் , இடப்பங்கீட்டு எதிராக பேசுவது அம்பேத்கர் அமைத்து கொடுத்த சமூக நீதிப்பாதைக்கு இழுக்கு என்பதைச் சொன்ன அவர்,  தமிழகத்திலும் நீட் உள்ளிட்ட மருத்துவ நுழைவு தேர்வுகளைத் தடுக்காமல், இரட்டை இலைக்காக சண்டை போடும் ஆளும் கூட்டத்தை இடித்துரைத்தார்.

WhatsApp Image 2017-04-23 at 6.59.33 AM
இறுதியாகப் பேசிய இளந்தமிழக இயக்கத்தின் விசை ஆசிரியர் குழுவின் பொறுப்பாளர் தோழர் நற்றமிழன்,  இன்றைய இளைஞர்கள் அம்பேத்கரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கி சில கருத்துகளை பதிவு செய்தார். இப்ப எல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா எனகூறுகிறார்கள் இளைஞர்கள். அண்மையில் இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட  கருத்தாய்வில் (survey) சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் ,  வெறும் 4 விழுக்காடு இளைஞர்களே சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். மீதமுள்ள இளைஞர்கள் அனைவரும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் (ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணம்) தான் செய்துள்ளார்கள். சாதி அடுத்த தலைமுறைக்கு செல்வதற்கு  அகமண முறை தான் காரணம் என்றார் அம்பேத்கர். ஆனால் இன்று யாரும் சாதி பார்க்கவில்லை என்று கூறிக்கொண்டே ஒரே சாதிக்குள் திருமணம் செய்து சாதியை அடுத்த தலைமுறைக்கும் நாம் தான் எடுத்து செல்கின்றோம். சாதி ஒழிய வேண்டுமென்றால் ஒரே சாதிக்குள் நடக்கும் அகமண திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் மட்டுமே இந்திய சமூகம் விடுதலை பெற முடியும் என தனது கருத்தை தோழர் நற்றமிழன் பதிவு செய்தார்.

நிகழ்வை இளந்தமிழகம் இயக்கத் தோழர் வசுமதி தொகுத்து வழங்கினார். பல்வேறு பணிகளுக்கு இடையிலும்  நிகழ்வை முழுமையாகத் தோழர் செல்லையா முத்துசாமி காணொளி பதிவு செய்தார். இளந்தமிழகம் இயக்கத் தோழர்  பட்டுராஜா நன்றியுரை ஆற்றினார்.

இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *