கிறித்தவ மதத்தில் பல பிரிவுகளில் ரோமன் கத்தோலிக்க கிறித்தவ மதம் முதன்மையானது, இது உலகம் முழுவதும் பரவியுள்ள பழமையான பாரம்பரிய மதமாகும். தமிழ்நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து வேறூன்றி வந்துள்ள இந்த மதம், இங்குள்ள சாதிய, பன்னையார்களின் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும் பெரும்பான்மையாக தழுவ வைத்தது.
விவிலியத்தின்படி சமத்துவத்தை இயேசு கிறித்துவின் போதனையாக பரப்புரை செய்ததோடு அல்லாமல், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பல்வேறு சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கியது. இருந்தாலும் வழிபாடு சார்ந்த ஆன்மீக அதிகாரம் மையங்களில் சாதிய ஆதிக்க சக்திகள் ஊடுருவினர். இதனால் இன்றளவும் கிறித்தவ சமுதாயத்தில் கூட தலித் மக்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகின்றனர். மறை மாவட்ட ஆயர் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், ஆலய பொறுப்புகள் போன்ற அதிகாரங்களில் நுழைய முடியாமலும் தடுக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறித்தவ திருச்சபையின் எல்லா மறை மாவட்டங்களில் பொதுவானது என்றாலும், சிவகங்கை மறை மாவட்டத்தில் இது அதிகமாகவும், ஆழமாகவும், தீவிரமாகவும் உள்ளது. இன்றளவும் உடையார் சாதி ஆதிக்க சக்திகள் ஆயராகவும், பெரும்பான்மை அருட்தந்தையர்களாகவும் இருப்பதால், தலித் (தேவேந்திர குல வேளாளர்) சமூக மக்களில் இருந்து ஒருவர் கூட அருட்தந்தையாக ஆக முடியாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில் சில போலி காரணங்களைச் சொல்லி குரு மடத்தில் படித்துவந்த, தலித் சமூகத்தைச் சார்ந்த அருட்சகோதரர் மிக்கேல்ராஜ் அவர்களை கடந்த 5 ஆண்டுகளாக அருட்தந்தையாக நியமிக்காமல் இழுத்தடித்து வருகிறது சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகக் குழு.
இதற்கு எதிராகவும், சிவகங்கை மறை மாவட்டத்தில் நடந்துவரும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் தலித் மக்களும் சனநாயக சக்திகளும் கடந்த 4, 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இளந்தமிழகம் இயக்கமும் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொடக்கம் முதல் அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு ஒருங்கிணைத்த மறை மாவட்ட ஆயர் இல்ல முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
இப்படி பல கட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 16 அன்று, சிவகங்கை மறைமாவட்டம் R.S.மங்களத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி, மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் தலைமையில் மக்கள் பொது விசாரனை ஒன்றை பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியில் நடத்துவது என்று கூட்டாக கடந்த மாதம் நடந்த பல்வேறு அமைப்புகள் கூடிய கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவெடித்தோம். இந்த நிகழ்வின் மூலம் மக்களிடம் இருந்து நேரடியாக கருத்துகளை விசாரித்து அந்த அறிக்கையை பொதுச் சமூகம் மற்றும் அரசின் முன் சமர்பிக்கவுள்ளோம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி, தலித் கிறித்துவ மக்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு முண்ணனி, தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை, தேவேந்திர குல வேளாளர் சமூக நல இயக்கம், இளந்தமிழகம் இயக்கம் மற்றும் பல்வேறு சனநாயக, சமத்துவ இயக்கங்கள் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தும் இந்த நிகழ்வில், அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
– ஒருங்கிணைப்புக் குழு,
இளந்தமிழகம் இயக்கம்