இந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி

இந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி

தமிழக மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதம்பாலம் என்ற பகுதியில் திங்கள் இரவு 10 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது.  4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குண்டு பாய்ந்ததில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள‌து. மீனவர்கள் வலைகளை அப்படியே விட்டுவிட்டு திரும்பியுள்ளனர்.

மீனவர்களை தாக்குவதையும், கொலைசெய்வதையும் தொடர்ச்சியாக இலங்கை செய்கிறது. இதுவரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்கள கடற்படை கொன்றுள்ளது. இது இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இனப்படுகொலையின் தொடர்ச்சியாகவே நடக்கிறது, உலகெங்கிலும் எல்லை தாண்டும் மீனவர்கள் கண்டிக்கப்படுவதும், அதிகபட்சமாக கைது செய்யப்படுவதும் மட்டுமே வழக்கம்.  ஆனால் இந்தியா நட்பு நாடு என கூறும்  இலங்கை மட்டும் தொடர்ந்து தமிழக மீனவர்களை கொல்கிறது.

மறுபக்கம் இந்தியா தொடர்ந்து மவுனமாக இருந்து இலங்கையின் படுகொலையை ஆதரிக்கிறது. பகை நாடு எனக்கூறும் பாகிஸ்தான் கூட மீனவர்கள் விடயத்தில் கரிசனத்தோடு நடத்துகொள்கிறது. ஆனால் இலங்கை ஏன் தொடர்ந்து மீனவர்களை கொல்கிறது என இந்தியா ஒருமுறை கூட உரிய அக்கறையோடு இலங்கையை கண்டிக்கவில்லை. கொல்லப்படுவது தமிழர்கள் என்பதால் மாற்றாந்தாய் மனப்பான்மையுட்னேயே நடந்து கொள்கிறது. தமிழர் படுகொலைகளை தங்கள் அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறது. மத்தியில் காங்கிரசு, பாஜக என எந்த அரசுகள் வந்தாலும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மறுபக்கம் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக்கொள்கிறது, இதனை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய அரசே, தமிழக அரசே !

தமிழக மீனவர்களின் உயிர்கள் காக்க படவேண்டும், அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தல் தொடர வேண்டும்.

கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே,தமிழக மீனவரை சுட்டு கொன்ற இலங்கை கடற்படையை சேர்ந்தவரை கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அறிவிக்க வேண்டும்.

அதுவரை இலங்கையுடனான தூதரக உறவுகளை இந்தியா நிறுத்தி வைக்க வேண்டும்..

சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை மூடவேண்டும்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

இலங்கை மீது பொருளாதாரதடை விதிக்க வேண்டும்.

இலங்கை பொருட்களும், சுற்றுலாவும் புறக்கணிக்கப்படவேண்டும் என இளந்தமிழகம் இயக்கம் கோருகின்றது.

– இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *