பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பினை உறுதி செய் : ஃபைட் (FITE) கோரிக்கை

உழைக்கும் பெண்களே ,

மனித வரலாறு தொடங்கிய நாளில் இருந்தே மனித குல வளர்ச்சிக்கு ஆண்களை விட அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் வாழ்த்துகள். ஆம்,  உழைப்பில் சமத்துவம் உண்டு, எனினும், உழைப்புக்கான அங்கீகாரம், உழைப்புக்கேற்ற ஊதியம், உழைப்பு சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் தொழிலாளர்களின் உரிமைகள், பணியிடப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பல்துறைகளில் பணியாற்றிட ஏதுவான வாய்ப்புகள் ஆகியவற்றில் பாலின சமத்துவம் இல்லை.

இதில் பாலின சமத்துவத்தினை வலியுறுத்தியும்,ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண் விடுதலையினை வலியுறுத்தியும் 100 ஆண்டுகளாக நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களினை  உணர்த்துவதே மார்ச்சு – 8 :அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள்.

ஆண் தொழிலாளர்களுக்கு நிகரான உழைப்புக்கேற்ற கூலி, பணி நேரம் ஆகியவற்றினை வலியுறுத்தி 1908ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான ஆடை தயாரிப்பு பெண் தொழிலாளர்களின் போராட்டமே இன்றைய கொண்டாட்டத்திற்கான முதற்புள்ளி. நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களின் பயனே இன்று நாம் அனுபவிக்கும் உரிமை சட்டங்கள். அதிகார மையங்களை எதிர்த்து போராடாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனையும் இந்நாள் நமக்கு தரும் செய்தி. பி.எப் தொகையை 58 வயதிற்கு பிறகு தான் எடுக்க முடியும் என்ற விதியை எதிர்த்து பெங்களூரில் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கி போராடி வெற்றி கண்டது அண்மைய சான்று.

WhatsApp Image 2017-03-08 at 00.35.41

நமது ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் ஒப்பீட்டளவில் ஆணுக்கு நிகரான உரிமைகளை கொண்டிருந்தாலும் இன்னும் வென்றெடுக்க வேண்டியவைகள் பல உள்ளன. இந்தியாவில் ஐடி பெண் ஊழியர்கள், ஆண்களை விட 20% குறைவான ஊதியம் பெறுகின்றனர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. சம்பளம், சம்பள உயர்வு, பதவி உயர்வு, ப்ராஜக்ட் வாய்ப்புகள் ஆகியவற்றில் பாலின வேறுபாடுகள் ஐடி துறையிலும் நிறைந்தே உள்ளன. பணியிடங்களிலும், பணிக்கு செல்லும் ஊர்திகளிலும் பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள் , அச்சுறுத்தல்கள் இல்லாமல் இல்லை. மாதவிடாய் காலம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு காலங்களில் நெகிழ்வு கொண்ட பணியமர்த்தல் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் வேண்டும், அண்மையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 9 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை பல்வேறு போராட்டங்களின் விளைவாக அளிக்கப்பட்டப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இத்தனை உரிமைகளையும் வென்றெடுப்பது எளிதானதல்ல. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு பெண்கள் தலைமையில் போராடினால் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

அதிகமான பெண்கள் வீட்டு சமையலறையில் இருந்து விடுதலையாகி சமூக –பொருளாதார- அரசியல் துறைகளில் பெரும் பங்கெடுக்க வேண்டும்.  இதற்கு பாதுகாப்பான பணியிடங்கள், போக்குவரத்து, தங்கும் வசதிகள் இன்றியமையாதது. ஆணாதிக்க சமூகமோ, பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள், கொலை, கொள்ளை என பாதுகாப்பில்லா சூழல் ஆகியவற்றினை கொண்டு பெண்களை வீட்டுக்குள்ளே அடைக்க முயல்கிறது. சிறுசேரியில் உமா மகேசுவரி, நுங்கம்பாக்கத்தில் சுவாதி, புனே இன்போசிஸ் நிறுவனத்தில் ரசீலா ஆகியோர்களின் கொலைகள் ஆகியன அண்மைய சான்று. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியது இக்காலக்கட்டத்தில் அரசு மற்றும் ஐடி நிறுவனங்களின் முதன்மை கடமை. இதற்கு நாம் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

                     பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது பகல் கனவல்ல,

                                   நனவாக்கிட அனைவரும் ஒன்றுபடுவோம்

ஐடிதுறையில் சுமார் 30 % பெண் ஊழியர்களை பணி  செய்கின்றனர். இவர்களின் நலன் பொருட்டு, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் தொழிற்சங்கத்தின் (Forum for IT Employees-FITE) 10 அம்ச கோரிக்கைகள்:

தமிழக அரசே , ஐடி நிறுவனங்களே!

  1. பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தினை உறுதி செய்
  2. சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை 9 மாதங்கள் வழங்கு
  3. பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்திலும் குழந்தை காப்பகங்கள் அமைத்திடு
  4. அறிவியல் பூர்வமான,வெளிப்படையான,பாரபட்சமற்ற திறன் மதிப்பீடு முறை(Appraisal System) வேண்டும்,அதில் பெண்களின் சமூக நிலையை கணக்கில் எடு.
  5. நிறுவனங்களின் எல்லா மட்டங்களிலும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண் பணியாளர்களை உறுதிபடுத்து
  6. பெண்களின் அனுமதி பெற்று மட்டுமே இரவு நேரப் பணியில் அமர்த்து
  7. மாதவிடாய் காலம், கர்ப்ப காலம்,தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் போதிய இடைவெளி நேரம் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்ட வேலை நேரம், இடம் வழங்கிடு
  8. பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்திலும் பாலியல் தொல்லைகள் மீதான புகார்களை விசாரிக்கும் உள்ளக புகார் குழுக்களை அமைத்திடு
  9. பணியாளர்களுக்குத் தொடர்ச்சியான பாலின வேறுபாடு குறித்த விழிப்புணர்வு பட்டறைகளை நடத்து
  10. தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்கள் உள்ள பகுதியில் அரசு தங்கும் விடுதிகள் அமைத்திடு

             

மாற்றம் கொண்டு வர நெஞ்சுறுதி கொள்வோம்!  உரிமைகளை வென்றெடுக்க அணி திரள்வோம்.

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் மன்றம் – Forum for IT Employees (FITE)

இளந்தமிழக இயக்கத்தின் ஐடி ஊழியர்களுக்கான தொழிற்சங்கம்

English version : http://www.visai.in/2017/03/08/international-working-womens-day-2017/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *