நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் – தமிழக அரசின் இரட்டை வேடம்

புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு பிப்ரவரி 15 அன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்குள்ள விவசாயப் பெருமக்கள் இத்திட்டத்தினை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாய நிலங்களைப் பாழ்படுத்தும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தினை எதிர்த்தும் நெடுவாசல் மக்கள் போராட்டத்தினை ஆதரித்தும் தமிழகமெங்கும் ஆங்காங்கே மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், ஐடி ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இளந்தமிழகம் இயக்கமும் இப்போராட்டத்தினை ஆதரிக்கின்றது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தினை உடனடியாக இரத்து செய்யுமாறு இந்திய ஒன்றிய அரசினை கேட்டுக்கொள்கிறது.

நெடுவாசல் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒரு பக்கம் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுப்பதும் மறுபக்கம் காவல்துறையை கொண்டு போராட்டத்தை பரவ விடாமல் தடுப்பதுமாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. புது தில்லியில் பிரதமரைச் சந்தித்து நெடுவாசல் திட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட தமிழக முதல்வர் மறுபக்கம் போராடும் மக்களை கலைந்து செல்லுமாறு ஆணையிடுகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த முற்பட்டவர்களை காவல்துறையினரின் அடக்குமுறையினை ஏவியும் போராட்டக்கார்ரகளை கைது செய்வதும் தொடர்கிறது. தமிழக அரசின் இரட்டை வேடத்தையும் காவல்துறையின் அடக்குமுறையினையும் இளந்தமிழக இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசு இத்திட்டத்தினை கைவிட செய்வதற்கான அழுத்தம் கொடுக்கும் பணியினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மக்களின் போராட்டம் வெல்லட்டும்!

– ஒருங்கிணைப்புக் குழு,
இளந்தமிழகம் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *