இளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலையின் சூழ்ச்சி முறியடிப்பு.

இளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலையின் சூழ்ச்சி முறியடிப்பு ,  இளந்தமிழகம் இயக்கத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பு ஏற்பு , ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், FITE நிர்வாகிகள் பதவி நீக்கம், செய்தி தொடர்பாளர் பதவி விலகல். 

வணக்கம்,

சென்ற ஆண்டு சூன் மாதம் 11,12 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நடுத்தர வர்க்கத்திரை இளந்தமிழகம் இயக்க அரசியல் கொள்கை அறிக்கையினை நோக்கி அணிதிரட்டுவதில் கடந்த சில ஆண்டுகளாக தோய்வு ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறினார்கள் . இது குறித்து விவாதம் நடந்த பொழுது கடந்த சில ஆண்டுகளாக சிபிஎம்எல் கட்சியில் இளந்தமிழக உறுப்பின‌ர்கள் பலரையும் உறுப்பினராக இணைத்து அக்கட்சியின் வேலைகளை முன்னெடுத்துள்ளது தெரிய வந்தது. அக்கட்சியின் முடிவுகளை ஒட்டியே இளந்தமிழகத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் இருந்து வந்துள்ளன. அதன் தாக்கத்தினால் இளந்தமிழக‌  அணுகும் முறையிலும் மாற்றம் பெற்று வந்துள்ளது. இயக்கத்தின் முடிவுகளிலும் நிர்வாகத்திலும் கட்சியின் தலையீடு இருந்து வந்துள்ளது. உதாரணமாக‌, பைட் நிர்வாகக்குழுசீரமைப்பு கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு என்பதினை கட்சியே ( தோழர்கள் செந்தில், சிறீராம்) ஒத்துக் கொண்டுள்ளது. கட்சியில் முன்பே எடுக்கப்பட்ட முடிவுகளை இளந்தமிழகத்தில் அமல்படுத்த 11 பேர் கொண்ட செயற்குழுவில் 7 பேர் கட்சி உறுப்பினர்கள் இருந்தனர் என்பது பொதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் 2016 சூன் 12 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், இளந்தமிழக இயக்கத்தின் உறுப்பினர் வேறொரு அரசியல் இயக்கம் அல்லது கட்சி அமைப்புகளில் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதில் நடந்த விவாதத்தில் இளந்தமிழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் ஒருவர் வேறொரு அரசியல் கட்சி,அமைப்புகளில் இருக்கக் கூடாது என்று பொதுக்குழுமுடிவு செய்தது. இந்த முடிவுக்கு பின்னர் தான், இளந்தமிழக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், 7 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல பொதுக்குழு உறுப்பினர்கள் சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) கட்சிஉறுப்பினர்களாகி கட்சிப்பணிகளை செய்து வந்ததை பொதுக்குழுவிற்கு தெரியப்படுத்தினர், இது இளந்தமிழக இயக்க உறுப்பினர்களால் கண்டிக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து வெளியேறி இளந்தமிழகம் இயக்கத்தில் மட்டும் பணியாற்றுமாறு  கேட்டுக்கொள்ளும் ஓர் தீர்மானம் பொதுக்குழுவில்  முன்மொழியப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் வேறொரு கட்சியின் உறுப்பினராக இருக்க‌க் கூடாது என்பதை ஆதரித்த கட்சியிலிருந்த தோழர்கள் சிலர் சிபிஎம்எல் செயல்பாடு குறித்து வெளிப்பட்டவுடன் அத்தீர்மானத்தை ஏற்க முடியாது என்றனர். பின்னர் தோழர் செந்தில் இது குறித்து விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2016 சூன் 26ந்தேதிக்கு பொதுக்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.இளந்தமிழகம் இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தோ, FITE தொழிற்சங்கத்தின் நிர்வாக, தலைமைப்பொறுப்புகளில் இருந்தோ கட்சியில் இருந்து திரும்பியதாகச் சொன்னவர்கள் விலக வேண்டும் எனக்கோரவில்லை.  ஒற்றை கோரிக்கை என்பது எந்த கட்சியின் உறுப்பு அமைப்பாகவும்,வேறொரு கட்சியின் திட்டத்திற்கோ இளந்தமிழகம்  இயக்கம் செயல்பட முடியாது என்பதுதான்.

பிரச்சனைகளை சுமூகமாகப் பேசி அனைவரும் இணைந்து இளந்தமிழகப் பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு ஆறு பேர் கொண்ட ஒரு குழு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்டறிந்தனர். இத்தகைய சூழலில் செந்தில், பிரச்சனையினைத் தீர்க்கும் பொருட்டு. கட்சியிலிருந்து வெளியில் வருவதாக உறுதியளித்ததன் பேரில், முன்னர் ஜூன் 12 முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

சூன் 26 அன்று நடந்த பொதுக்குழுவில், செந்தில் அவர்களின்  வேண்டுகோளின்படி பொதுவெளியில் சிபிஎம்எல் – மக்கள் விடுதலை  கட்சிக்கு ஏற்படும் சிக்கலை கவனத்தில் கொண்டு  தோழமை இயக்கம் எனும் அடிப்படையில், சிபிஎம்எல் – மக்கள் விடுதலை  கட்சியின் பெயரும், கண்டனங்கள் உள்ளிட்ட சொற்றொடர்களும் ஜூன் 12 முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் இருந்து நீக்கப்பட்டன. கட்சியில் இருந்து அனைவரும் திரும்பி வருகின்றோம், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒற்றுமையும்,அரசியலும் முக்கியம் என்று கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் தான் மாற்றங்கள் ஒத்துக் கொள்ளப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் வேறொரு அமைப்பில் நீடிக்கக் கூடாது என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.  இது குறித்து அரசியல் விவாதங்கள் 6 மாதங்கள் கழித்து நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கட்சியில் இருந்து அனைவரும் விலகுவதாகவும் இளந்தமிழகத்திற்கு திரும்பி இங்கு மட்டும் அரசியல் பணியாற்றுவோம் என தோழர் செந்தில் பொதுக்குழுவிற்கு உறுதியளித்தார். இந்த திருத்தப்பட்ட தீர்மானம் பொதுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல கட்சியில் ஏன் சேர்ந்தார்கள் என்பது குறித்து யாரும் விளக்கமளிக்கவில்லை.

பின்னர் ஒரு சில இயக்க நிகழ்வுகள் நடந்தாலும் இணக்கமான சூழல் திரும்பவில்லை. செயற்குழுவும் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. முரண்பாடுகள் முற்றி தனி நபர் தாக்குதலாகிப்போனது. இதன் எதிர்வினையாக ஒரு சில நபர்கள் விரும்பத்தகா செயல்களிலும் ஈடுபட்டனர்.  தோழர் செந்தில் தரப்பு மீண்டும் இரட்டை உறுப்பினர் நிலை பொதுக்குழு அளவில் வேண்டும் எனப்பேச ஆரம்பித்தனர். இது குறித்து ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினராகச் சந்தித்துப் பேசத் தொடங்கினர். இது, அமைப்பிற்குள் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது. ஒட்டுமொத்த பிரச்சனையும் ஏதோ ஒரு சிலதனிநபர்களால் தான் நிகழ்வதாகவும்  இரு தரப்பினர்களிடையே மோதல் நடப்பது போலவும் சித்தரிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இயக்கத்தையே கட்சி தான் தொடங்கியது என தோழர்.செந்தில் உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப அது பொய்யான தகவல் என்பது உரிய விளக்கத்தோடு  தொடக்க காலத்திலிருந்து இருக்கும் தோழர்கள் உறுப்பினர்களுக்கு சொன்னார்கள்.

ஜூன் 12 தீர்மானம் வரும் வரை, சமூகப் பிரச்சினைகளில் தோளோடு தோள் நின்ற தோழர்கள், சிபிஎம்எல் – மக்கள் விடுதலைக் கட்சியின்  தலையீட்டை விமர்சித்த  ஒரே காரணத்தினால் இடதுசாரி எதிர்ப்பாளராகவும், நவீன தாராளவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். சிபிஎம்எல் – மக்கள் விடுதலை கட்சியின் அமைப்பைக் கைப்பற்றும் சனநாயக விரோத செயல் திரிக்கப்பட்டு, இடதுசாரி -வலதுசாரிகளின் சண்டை அமைப்பிற்குள் நடப்பதாக கட்சித் தோழர்களால் தொடர்ந்து அரசியல் வெளியில் பரப்புரை செய்யப்பட்டு வந்தது, வருகிறது.

மேலும், சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் தோழர்கள் சிலர், நமது இயக்கத்  தோழர்கள் பட்டுராசன், அருணகிரி அவர்களை மிரட்டும் தொனியில் அலைபேசியில் பேசி உள்ளனர். இதன் பொருட்டு விரைவில் பொதுக்குழுவினைக் கூட்டுமாறு பல பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.  சூழ்நிலை மிக மோசமாக செல்வதை உணர்ந்த உறுப்பினர்கள் பொதுக்குழுவினை கூட்ட கோரினார்கள். இந்த சமயத்தில் தான் சிபிஎம்எல் கட்சியின் தலைவர் தோழர் ஜெ.சிதம்பரநாதன் இளந்தமிழகம் இயக்கத்தில் சிபிஎம்எல்லின் கட்சி தலையீட்டை ஒப்புக்கொண்டு இது தொடர்பாக பேச எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பொதுக்குழு கூட்டத்தினை ஒருங்கமைப்பது சம்பந்தமாக செயற்குழு கூட்டழைப்பு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதன் சாரம், நவம்பர் 19 அல்லது திசம்பர் 4 தேதிகளில் அதிக எண்ணிக்கையிலான பொதுக்குழுவினரின் பங்கேற்கும்  வகையில் பொதுக்குழுவினை கூட்டலாம் என்று ஒரு சராரும், மற்றும் ஒரு சாரார் சிபிஎம்எல் கட்சியினை சந்தித்து வந்ததற்கு பிறகு தான் பொதுக்குழுவினை கூட்ட வேண்டும் என்றும் முன்நிபந்தனை வைத்தனர். அது தேவையில்லை என்பது மற்றவர்களின் கருத்தாக இருந்த‌து.

இந்நிலையில், பொதுக்குழுவின் கருத்தை அறிந்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது.  விரைவில் பொதுக்குழுவினை கூட்டி சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்னும் நோக்கில் நவ.19 அன்று பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றும் சிபிஎம்எல் கட்சியிடம் பேசத் தேவையில்லை என்றும் 25க்கும் (பெரும்பான்மை)அதிகமானோர் தெரிவித்தனர். 90% அதிகமானோர் கலந்து கொள்ளும் பொதுக்குழு கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள இயலும் என்றும் சிபிஎம்எல் கட்சியினைச் சந்தித்த பிறகுதான் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும் கூறி சிலர் நவ.19 கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று  தெரிவித்தனர். அந்த தேதியில் வேறு பணியின் காரணமாக கலந்து கொள்ள முடியாது என்று ஒரு சிலர் தெரிவித்தனர். பொதுக்குழு கூட்டத்தினை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் கூட்ட முடியும் என்று கூறி ஒருங்கிணைப்பாளர் உட்பட ஒரு சிலர் கூட்டத்தினை புறக்கணித்தனர்.மேலும் தோழர் ஜார்ஜ், நவம்பர் 19 அன்று கூடும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் திசம்பர் 4 அன்று ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பலரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சூன் 26 பொதுக்குழு கூட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி கட்சிப் பணிகளில் தொடர்ந்து தோழர்.செந்தில், பரிமளா, ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்துள்ளனர். இது பொதுக்குழு தீர்மானத்தை மீறிய நடவடிக்கையாகும். இத்தனைத் தடைகளையும் கடந்து நவ.19 அன்று 23 பொதுக்குழு உறுப்பினர்கள் நேரில் வந்தும் சிலர் அலைபேசி மூலமாகவும் கலந்து கொண்டனர். இதில் விவாதித்து எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகள்:

ஜூன் 26 தீர்மானத்தின்படி ஒரு பொதுக்குழு உறுப்பினர் வேறொரு அரசியல் கட்சி /அமைப்புகளில் இருக்கக் கூடாது என்றும் கட்சியிலிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் இருந்து விலகி உறுப்பினர்கள் அளவில் செயல்பட வலியுறுத்தியும் கட்சி சாராத ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைத்து இளந்தமிழக இயக்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும்  எடுத்துரைக்கப்பட்டது.

நவ.19 அன்று கூடிய பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பொதுக்குழு மின்னஞ்சலுக்கு அனுப்பபட்டது. பல்வேறு காரணங்களை கூறி நவ.19 கூட்டத்தினைப் புறக்கணித்தவர்கள் இதுபொதுக்குழு கூட்டம் அல்ல என்று புறக்கணித்தனர். ஒரு சிலர் கூட்டத்தின் முடிவுகளை ஆமோதித்தனர். ஆக மொத்தம், 49 பொதுக்குழு உறுப்பினர்களில் 28க்கும் அதிகமானோர் நவ.19 கூட்டத்தின் கருத்துகளை ஆதரித்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் செந்தில் செயற்குழுவிற்குள் விவாதிக்காமல் தன்னிச்சையாக சனவரி 8 ந்தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று மின்னஞ்சலில் தெரிவித்தார்.

நவ.19 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் வந்தடைந்த கருத்துக்கள் மீது எந்த கருத்துக்களும் சிபிஎம்எல் மக்கள்விடுதலை தரப்பினரால் கூறப்படாததாலும், நவம்பர் 19 பற்றிய எந்தநிகழ்ச்சி நிரலும் சனவரி – 8 கூட்ட நிரலில் இடம்பெறாததாலும் 30 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

18 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிய சனவரி 8 -ஆம் தேதி கூட்டத்தில், ஜூன் 26 அன்று ஒற்றுமை-நம்பிக்கை-அரசியல் எனும் முழக்கத்திற்கு ஏற்ப பொதுக்குழுவால் ஏற்கப்பட்ட ”இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் / வேறொரு கட்சியில்உறுப்பினராக இருக்கக் கூடாது”  எனும் தீர்மானத்தை மாற்றி பொதுக்குழு உறுப்பினர் எந்த ஒரு கட்சியிலும் இருக்கலாம் என்று முன்மொழிந்தது  இயக்கத்தின் ஒற்றுமையினை குலைக்கும் செயல்.

//ஒரு முன்னணியில் செயல்படுவது பற்றியோ, கட்சிகளுடன் இணைவது பற்றியோ முடிவெடுக்கும் அதிகாரம் பொருந்தியது இயக்கத்தின் பொதுக்குழு மட்டும்தான். அந்த அதிகாரம் செயற்குழுவிற்கோ, ஒருங்கிணைப்பாளருக்கோ, பிற தனி நபர்களுக்கோ கிடையாது என்பதை இந்த பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது// –எனபது  ஜூன் 26 தீர்மானத்தின் ஒரு சரத்து.

ஜூன் 26 அன்று தோழர் செந்தில் முன்வைத்த “ஒற்றுமை-நம்பிக்கை-அரசியல்” எனும் முழக்கத்தை அவரே மீறுகின்ற செயல் கண்டிக்கத்தக்கது. ஜூன் 12 -26 – க்கும் இடையில், தீர்மானத்தில் இருந்து கட்சியின் பெயரை நீக்குவதில் காட்டப்பட்ட அக்கறை, இளந்தமிழகம் இயக்கம் தனி இயக்கமாகவும், தனித்துவமாகவும் செயல்பட வேண்டும் எனும் எந்த எண்ணமும் கட்சியில் இருந்து திரும்பியதாகக் கூறியவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகியது.

அதோடு, இன்றும் இளந்தமிழக‌ இயக்கத்தில் உள்ள ஒரு பொதுக்குழு உறுப்பினர் வேறொரு கட்சியில் இருக்கக் கூடாது எனும் ஜூன்-26 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமலில் உள்ள நிலையில், சனவரி 8 கூடிய கூட்டத்தில், கட்சியில் நாங்கள் இன்றும் தொடர்கிறோம் என்று தோழர் செந்தில், ஜார்ஜ் , பரிமளா உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  இதனால் தோழர்.செந்தில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், தோழர்.ஜார்ஜ் பொருளாளர் பொறுப்பிலிருந்தும், தோழர்.பரிமளா ஃபைட் தலைவர் பொறுப்பிலிருந்தும்,  இன்னமும் கட்சியில் நீடித்து வரும் அனைத்து FITE நிர்வாகிகளும் அவர்களது பொறுப்பிலிருந்து நீக்கப்படுகின்றார்கள். அதே போல சூன் 26க்கு பிறகு கட்சியிலிருந்து வெளிவந்த தோழர்.வினோத் நவம்பர் 19 பொது குழு கூட்டத்திலேயே செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன் என சொல்லிவிட்டார். கட்சியிலிருந்து வெளிவந்த  எல்லோரும் பொதுக் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டு உறுப்பினர்களாக மட்டும் தொடர்கின்றார்கள்.

எனவே, நவம்பர் 19 அன்று 28க்கும் மேற்பட்ட‌ பொதுக்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட கட்சி சாராத ஒருங்கிணைப்பு குழு இன்றியமையாதது ஆகும். இத்தகைய சூழலில் தான், ஜூன் 12,26 பொதுக்குழுதீர்மானத்தின்படி, செயல்படாமல் முடங்கிப்போயுள்ள அமைப்பு நடவடிக்கைகளை முன்னகர்த்தி செல்லவும் அமைப்பு சிக்கல்களை களையவும், கட்சியின் முடிவுகளை அமைப்பின் பெயரில்  தனி நபர்கள் செயல்படுத்துவதை தடுக்கவும், கட்சி சார்பில்லாத ஆரம்பகால உறுப்பின‌ர்களை கொண்டு புதிய‌ ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது  ஒரு தற்காலிக ஏற்பாடே ஆகும்.

ஜூன் 26 தீர்மானத்தின் சாரம் என்பது சிபிஎம்எல் கட்சியிலிருந்து வெளியேறி இளந்தமிழகத்தில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்வதே அன்றி இயக்கத்தில் இருந்து எவரையும் வெளியேற்றுவது அல்ல.  இதனை இன்றும் இந்த புதிய‌ ஒருங்கிணைப்பு குழு கடைபிடிக்கும்.அனைவரும் சேர்ந்து நிறைவேற்றிய‌  ஜூன் 26 ஆம் தேதி தீர்மானத்தின் மேல் நின்று மாற்றுக்கருத்துடையோரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி அமைப்பு சிக்கல்களை களைவதுடன் தோய்வைபோக்கி இயக்கத்தின் செயல்படுகளை புதுப்பிக்கும்.

தோழமை இயக்கமான இளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலை கட்சியை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இளந்தமிழகம் இயக்கம் நடத்தும் நிகழ்வுகள் யாவும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஒருங்கிணைப்பு குழுவின் வழிகாட்டுதலின் படி நடைபெறும். பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர்களாக மட்டும் தொடரும் தோழர்.செந்தில், ஜார்ஜ், பரிமளா உள்ளிட்ட சிபிஎம்எல்-மக்கள் விடுதலை கட்சியைச் சார்ந்தவர்கள் இளந்தமிழகம் இயக்கம், Forum for IT Employees (FITE) எனும் பெயரில் சில நிகழ்வுகளை தன்னிச்சையாக நடத்துவதை இளந்தமிழகம் இயக்க  உறுப்பினர்கள் சார்பாக கண்டிக்கின்றோம். இவற்றிற்கும் இளந்தமிழகம் இயக்கம், Forum for IT Employees (FITE) அமைப்பிற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இளந்தமிழகம் இயக்கத்தின் அரசியலையும், சமூக வெளியில் அதன் தேவை குறித்தும் கருத்தில் கொண்டு அனைவரும் தங்களுடைய ஆதரவை புதிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு வழங்குமாறு தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.  இதுவரை எமதியக்கம் பங்கேற்று செயல்பட்டுவந்த கூட்டமைப்பு கூட்டங்களுக்கு, போராட்டங்களுக்கு புதிய ஒருங்கிணைப்பு குழுவிலிருந்து பின்வரும் தோழர்களை தொடர்புகொள்ள‌ வேண்டுகின்றோம்.

சரவணக்குமார் – 98400 90898
வசுமதி – 94874 85266
பிரவீன் ராஜ் -89396 61119
 
 
— ஒருங்கிணைப்பு குழு
1) சரவணக்குமார், 2) ஜெயப்பிரகாஷ், 3) பிரவீன் ராஜ், 4) வசுமதி, 5) இளஞ்செந்தில்
6) அரவிந்தன், 7) தீபக், 8) தனஞ்செயன்

– இளந்தமிழகம் இயக்கம்.

One thought on “இளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலையின் சூழ்ச்சி முறியடிப்பு.

  1. மக்கள் திரள் இயக்கத்திற்கு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய விவாதம் , புரிதல், கருத்துக்கள், கொள்கைகள் அனைத்தும் “சூழ்ச்சி” என்று ஒற்றை பரிமாணத்தில் முடிந்து விட்டதா தோழர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *