“தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாப்போம்” – இளந்தமிழகம் இயக்கத்தின் பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாப்போம்” –
இளந்தமிழகம் இயக்கத்தின்  பொங்கல், தமிழ் புத்தாண்டு (௨௦௪௮) வாழ்த்துச் செய்தி
தொடரும் உழவர்கள் தற்கொலையுடன் தைத் திங்கள் பிறந்திருக்கின்றது. வறட்சி பொங்கும் பொங்கலாக இப்பொங்கல் விடிந்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதவாறு மிகக்  குறைந்த  அளவு மழை கடந்த 2016 ஆம் ஆண்டு  தமிழகத்தில் பதிவாகியுள்ளது. பருவமழை பொய்த்தது ஒருபுறம் என்றால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கர்நாடக அரசை தமிழகத்துக்கு நீரை திறந்து விட வலியுறுத்தாமலும் தமிழக உழவர்களை  வஞ்சித்தது பேரிடியாக அமைந்தது.
இதன் விளைவாக விதைத்த பயிர்கள் கருகுவதை காண முடியாமல், பயிர்க் கடன் தொல்லை, இடைத்தரகர் சுரண்டல்கள் என தொடர்ந்து கடும் மன நெருக்கடிகளுக்கு ஆளாகிவரும் உழவர்களின் தற்கொலைச் செய்திகள் நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.  கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 200 க்கும் அதிகமான உழவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். 50,000 ரூபாய் கடனுக்காக கூட நஞ்சு குடித்து தற்கொலை செய்த உழவர்களும் இப்பட்டியலில் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு வழக்கமான கடன் தள்ளுபடி, வரிச் சலுகை, நிவாரணத் தொகை என உழவர்கள் தற்கொலையை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் வேளாண் தொழில் வறட்சியால் அழிந்து வரும் பொழுது வெறும் சடங்காக கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றனவே தவிர உழவுத் தொழிலை பாதுகாக்க, மேம்படுத்த தமிழ்நாடு அரசிற்கு நீண்ட கால கொள்கைத் திட்டம் இல்லை என்பதே  உண்மை. வறட்சியால் உழவு பொய்க்கும் பொழுது வேறு சில சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டோ, கூலிகளாகவோ பிழைப்பு நடத்தி வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்த உழவர்கள் மத்திய அரசின் 500, 1000 ரூபாய்  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது அதற்கும் வழி இல்லாமல் தற்கொலையால் மடிகின்றனர். பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்திருக்கிறது. இனி அடுத்த பருவமழை வரும் வரை வறட்சியும் குடிநீர் பஞ்சமும் தொடரும் அபாயமும் இருக்கிறது. இப்படித் தான் இந்த ஆண்டு பொங்கல் விடிந்துள்ளது.
இப்படியான சூழலில்  உழவர் திருநாளாம் தைப் பொங்கல் வாழ்த்து என்பது வெற்று சொற்களால் பகிரப்படுவதோடு நிற்காமல் உழவுத் தொழிலை பாதுகாக்க, நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட திட்டங்களை நடைமுறைப் படுத்துவதே தமிழ் நாடு அரசு கூறக்கூடிய உண்மையான “பொங்கல்” வாழ்த்தாக அமையும்.
தமிழ்நாட்டிற்கு உணவு வழங்கும் பாசனப் பகுதிகளை “வேளாண் பாதுகாப்பு வளையமாக” அறிவிக்க வேண்டும், நீர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும், வேளாண் உற்பத்திக்கு நீண்ட கால கொள்கையை வகுக்க வேண்டும்,  காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர் நெருக்கடிகள் கொடுக்க வேண்டும், தற்கொலை செய்த உழவர்கள் அனைவர் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி  இனி வரும் பொங்கலாவது உழவர்களுக்கான பொங்கலாக விடிய தமிழ்நாடு அரசு  செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறோம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.    – குறள் 1033
Pongal wishes
– ஒருங்கிணைப்புக் குழு ,
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *