சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. அடங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு இளந்தமிழகம் ஆதரவு!

                2016  சட்ட சபை தேர்தலில் இளந்தமிழகம் இயக்கத்தின் நிலைப்பாடு

சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. அடங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு!     

கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் ஆட்சி செய்து வருகின்றன. இக்கட்சிகள் சமூக நீதி, சாதி ஒழிப்பு அரசியலில் சமரசம் செய்ததன் விளைவுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தோற்றம் பெற்றன. இக்கட்சிகள் வெளிப்படையாக இந்துத்துவத்தோடு சமரசம் செய்து மதச் சிறுபான்மையினரின் நம்பிக்கையை இழந்தன; மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பலியிட்டதன் உச்சமாய் ஓர் இனப்படுகொலையைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து அம்பலப்பட்டுப்போயின. மிக முக்கியமாக, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையோடு இக்கட்சிகள் எப்போதும் முரண்பட்டதில்லை. 1991 ஆம் ஆண்டில் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளுக்காக இந்தியக் கதவுகள் திறந்துவிடப்பட்டவுடன் நான்குகால் பாய்ச்சலில் இக்கட்சிகள் அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. இந்தியப் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்பவர்களாக மட்டுமின்றிதாமே இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் சூறையாடும் முதலாளிகளாக தின்று கொளுக்கத் தொடங்கினர்.

உலகமயம் உள்ளே வந்து இன்றைக்கு கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஒருபுறம் தீவிர உலகமயமாக்கலால் விவசாயம் வீழ்ந்துவிட்டது. கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நிலமற்றக் கூலி விவசாயிகள் இடப்பெயர்ந்துவிட்டனர். சிறுகுறு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். தீவிரத் தொழில்மயமாக்கலுக்கு தேவையான சாலை உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, ஆங்கிலத் திணிப்பு, மனித வள உருவாக்கமென பன்னாட்டு மூலதனத்தின் வருகைக்கான ஏற்பாடுகளும் அதனால் விளைகின்ற சமூகக் கேடுகள் இன்னொருபுறம். ஆனாலும், கிட்டதட்ட 95 இலட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மய தலைவிரித்தாடுகிறது.சமூக நீதி, மதச் சிறுபான்மையினர் நலன், மாநில சுயாட்சி போன்ற முழக்கங்களால் சேர்த்து வைத்திருந்த சமூக அடித்தளத்தை இக்கட்சிகள் இழக்கத் தொடங்கிவிட்டன. இப்படியாக, தனது அந்திமக் காலத்தைக் கண்டுகொண்டிருக்கின்றன இக்கட்சிகள். நலத் திட்டங்கள் மூலமாக எப்படியாவது தம்மைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றுவருகின்றன.

இக்கட்சிகள் அரசியல் களத்தில் வீழத்தப்பட வேண்டும் என்ற விருப்பமும் இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றின் தேவையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதுதான் தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கின்றது. இந்த தேர்தலின் முதன்மை நிகழ்ச்சி நிரல் திராவிடக் கட்சிகளுக்கான மாற்று யார்? அல்லது மாற்று எது? என்பதுதான். சாதி, மதவாத எதிர்ப்பு அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை என்று எந்த ஒன்றும் தேர்தல் களத்தில் முன்னுக்கு வரவில்லை. ஆனால், தி.மு.க. வுக்கும் அ.தி.மு.க. வுக்கும் தாங்கள்தான் மாற்று என வந்திருப்பதில் பெரும்பாலானோர் கட்சி, கொடி, இலச்சினை,முதல்வரின் முகம், படிப்பு, ஆடை ஆகியவற்றைத்தான் மாற்று என முன்வைக்கிறார்கள். மாறாக மாற்றுக் கொள்கையையும் அதன் அடிப்படையிலான நடைமுறையையும் வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த புறநிலைமைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மக்களின் வேட்கைகளைப் புறந்தள்ளிப் பல கட்சிகள் அ.தி.மு.க. , தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துள்ளன. எனவே, அ.தி.மு.க., தி.மு.க. வோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டியவைதாம்.

சாதியவாத பா.ம.க., மதவாத பா.ச.க., இனவாத நாம் தமிழர் கட்சி ஆகியவைத் தங்களை மாற்றென்று சொல்லிக் கொண்டு முன்னுக்கு வந்துள்ளனர். உண்மையில் இவர்கள் முன்னேற்றக் கழகங்களைவிட பிற்போக்கானவர்களாவர். சாதி, மத, இன அடையாளங்களை ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தி ஆளும் வர்க்கத்திற்கு வால்பிடிப்பவர்கள். ஊழல் கழகங்களுக்கு ஒரு போதும் இவர்கள்  மாற்றாக முடியாது என்பது மட்டுமின்றி மாற்றாகிவிடவும் கூடாது. இக்கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி மாற்றாகத் தங்களைச் சொல்லிக் கொண்டாலும் மூன்றாவது அணியாகவே காட்சியளிக்கின்றனர். பா.ச.க. வுக்கு கூட காங்கிரசுடனும் கம்யூனிஸ்ட்களுடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்ற கொள்கை நிலைப்பாடு உண்டு. தேர்தல் களத்தில் அப்படியான எந்த ஒரு கொள்கையையும் கடைப்பிடிக்காத கட்சிதான் தே.மு.தி.க.. முன்னதாக காங்கிரசு, பா.ச.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. வுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துவிட்டு  தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது ம.ந.கூ. கேப்டன் விஜய்காந்த் தலைமையிலான கூட்டணி மாற்று இல்லை என்பது அரசியலில் அனா…ஆவன்னா படித்தவர்களுக்குகூட தெரியும்.

விவசாயத்தின் வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், இயற்கை வளச் சூறையாடல், கண்மூடித்தனமான நகரமயமாக்கல் என அழிவின் வளர்ச்சியில் முந்திக் கொண்டு போகிறது தமிழகம்.  அரசியல் பொருளாதார நெருக்கடிகள் கண்ணுக்குத் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருப்பது தமிழகக் கட்சிகள் முன்வைக்கும் வெகுசனவாதக் கவர்ச்சி அரசியலே ஆகும். நான்கு இலட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது தமிழகம். ஐரோப்பாவில் நடப்பதுபோல் பெரும் பொருளாதார நெருக்கடிகளைக் காரணம்காட்டி இன்றைய அரசின் நலத் திட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பெரும் சமூக நெருக்கடி ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான், சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, சமூக சனநாயகம், பொருளாதார சமத்துவம் ஆகியக் கொள்கைகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியல் வளர்தெடுக்கப்பட வேண்டும் என்று இளந்தமிழகம் வலியுறுத்துகிறது. இந்த அவசியத்தையும் அரசியல் வெற்றிடத்தையும் தேர்தல்களம் மீள்உறுதி செய்கிறது.

அதே நேரத்தில்,  அசாதாரணமான அரசியல் நிலைமைகளிலும் வலிமையான இயக்கத்தின் தலைமையும் இருக்கும்போதுதான் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். அதுவரை தேர்தலில் குறைந்தபட்ச சாத்தியப்பாடு என்ற வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அவ்வகையில், சாதி, மதவாத எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் இடதுசாரி சக்திகளான சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), சாதி எதிர்ப்புச் சக்தியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக உரிமை மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க. ஆகிய நான்கு கட்சிகள் அடங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு மாற்று அரசியலின் கோரிக்கைகளுக்கு தம்மை தகவமைத்துக் கொள்வதில் உள்ள இடைவெளிகள் மீதான விமர்சனங்களோடு ஆதரவு கொடுப்பது என இளந்தமிழகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் போட்டியிடாத இடங்களில் மேற்படி அளவுகோலுக்குள் வரும் கட்சிகள்/வேட்பாளர்களை ஆதரிப்பது என்றும் இதில் மிக மோசமாக அறியப்பட்ட சமூக விரோதத் தன்மை கொண்ட வேட்பாளர்கள் இருப்பின் அவர்களை ஆதரிப்பது இல்லை என்றும் எமது இயக்கம் முடிவுசெய்துள்ளது. அதன்படி தளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.ஐ. வேட்பாளர் தளி இராமச்சந்திரனுக்கு ஆதரவு இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போராட்ட அரசியலில் இருந்தே மாற்று அரசியல் உருபெறும்.

தேர்தலைக் கடந்து மாற்று அரசியல் அணியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தைத்  தொடர்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *