இந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே!

இந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே!

தமிழக சட்டமன்ற தீர்மானத்தின்படி பன்னாட்டு நீதி விசாரணை கோரும் தீர்மானத்தை  ஐநாவில் கொண்டு வா!

இலங்கை அரசே செய்வதாகச் சொல்லும் உள்நாட்டு நீதி விசாரணையை ஆதரிக்காதே!

மே 2009 முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் புதையுண்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலையானதற்கான  நீதியை எதிர்ப்பார்த்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தினூடாக சர்வதேச சமூகத்தை  உலகத் தமிழர்கள் உற்று நோக்கியுள்ளார்கள். ஆறாண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் தமிழர்களுக்கு உரிய நீதிக் கிட்டவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பு, காணாமல்போனோர் பட்டியல், நில அபகரிப்பு, சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டோர் விடுதலை ஆகிய பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை. மறுபுறம், இனக்கொலைக்கான நீதி கோரி தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தமிழீழத் தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என மூன்று பரப்பிலும் நடந்து வருகின்றன.

தமிழர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாகவும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளினாலும் சேனல் 4 காணொளிகளினாலும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை  சர்வதேச சிவில் சமூகம் அறியத் தொடங்கியது. இதன் பயனாய், கடந்த ஆண்டு மார்ச்சில் மனித உரிமை மீறல் – தொடர்புடைய குற்றங்கள் மீதான பன்னாட்டு விசாரணைக் கோரிய தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேறியது. அதன்படி, அப்போதைய ஐ.நா.ம.உ. மன்ற ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் பன்னாட்டுப் புலனாய்வுக்காக  மார்த்தி ஆத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூசிலாந்து) அசும சகான்கிர்(பாகிசுதான்) ஆகியோர் தலைமையிலான குழுவை அமைத்தார். அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவே மறுத்தது சிங்கள அரசு.  இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்தது இந்திய அரசு. இலங்கையிலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்கள் பல்வேறு ஆதாரங்களை அனுப்பி வைத்தனர். இலங்கையில் நடந்த  ஆட்சி மாற்றத்தைக் காரணமாகச்  சொல்லி ஆறு மாதங்கள் தள்ளிப் போடப்பட்ட விசாரணை அறிக்கையை செப்டம்பர் 16 ஆம் தேதி இப்போதைய ஐ.நா.ம.உ.மன்ற ஆணையர் சையது அல் உசைன் அவர்கள் சமர்ப்பித்தார்.

விசாரணை அறிக்கையின் சுருக்கம்:

  • சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, வெள்ளை வேன் மூலம் கடத்தி கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள் என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கியுள்ளது. இக்குற்றங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் வரையறையின் கீழ் நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கப்பட்டால், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என உறுதிபடுத்த முடியும்.
  • இலங்கையில் ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும், 2002 முதல் 2011 காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதற்கான அடையாளம் காணப்பட்டிருப்பது  இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும்  ஐநா அறிக்கை கூறுகின்றது.
  • பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பெரிய சர்வதேசக் குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, பலப் பத்தாண்டுகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல்மயப்பட்டு இருப்பதும் உள்நாட்டில் விசாரித்து நீதி வழங்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது. எனவே, உள்நாட்டு நீதி விசாரணையைவிட கூடுதலான ஒரு பொறியமைவு வேண்டும் என்று அறிக்கை சொல்கின்றது.
  • சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் ஒன்றின் மூலம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை வெளிவந்த பின்னால் அமெரிக்கா முன் வைத்துள்ள தீர்மானமோ, இன்னும் ஒரு படி கீழே போய் உள்நாட்டு நீதி விசாரணையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய புவிசார் நலனுக்காக இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள ஈழத் தமிழர்களைப் பலியிடத்  தயாராகவுள்ளது அமெரிக்க அரசு.

கடந்த 65 ஆண்டுகளாக இலங்கையில் பல ஆட்சிமாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை, வன்முறை, திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இதுவரை எந்த ஒரு நிகழ்விற்கும் இலங்கை நீதிமன்றத்தினால் நீதி வழங்கப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை கலப்பு நீதிமன்றம் அமைப்பினும் அதில் இலங்கை அரசே பங்குபெறும் பொழுது தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும். எனவே,  பன்னாட்டு நீதி விசாரணை மட்டுமே தமிழர்களுக்கு நீதி வழங்கிட முடியும்.

வடமாகாணத்தில் வாழும் ஈழத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  வடமாகாண சபையும், 7 கோடி தமிழர்களினால் தேர்வு செய்யப்பட்ட தமிழக சட்டமன்றமும் இலங்கை அரசின் மீது ஒரு பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.இதுவே உலகத் தமிழர்களின் கோரிக்கை.

Ranil-Modi1-436x360

அரசியல் வரலாற்றுரீதியாகவும் பூலோகரீதியாகவும் இலங்கைத் தீவுடன் தொடர்புடைய இந்தியாவோ இலங்கை மீதான போர்க்குற்றங்கள், மனிதகுல விரோத குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் குறித்து தெளிவாகப் பதில் அளிக்காமல் இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் கோரிக்கையையும் தமிழக சட்ட மன்றத் தீர்மானத்தையும் துளியளவும் மதிக்கவில்லை. அரசியல், பொருளியல், இராணுவ உதவிகளை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. இது மானுட நீதிக்கு எதிரானது என்று புரிந்து கொண்டு இந்திய சிங்களக் கூட்டுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுவதிலேயே ஈழத் தமிழரின் எதிர்காலம் இருக்கிறது  இனக்கொலை இலங்கையை நாம்  புறக்கணிப்போம்.   இந்திய அரசைப் புறக்கணிக்கச் செய்வோம்.

இலங்கையில் ஆட்சி மாற்றம்- ஒரு மோசடி!
இன அழிப்பில் இராசபக்சேவும் இரணிலும் மைத்ரியும் வேறு வேறல்ல!
உள்நாட்டு விசாரணை நீதி வழங்கிடாது!
இனக்கொலை இலங்கை அரசு மீதான பன்னாட்டு நீதி விசாரணையே நீதி தரும் !

  srilankasrilanka 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *