இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பில் “தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம்” மற்றும் சிற்றுளி பதிப்பகத்தின் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிறு (20-செப்-2015) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் நடைபெற உள்ளது .
செப்-17, 2015 தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள். கடந்த ஆண்டு இதே செப் 20ல் பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இடையுறவைக் கண்டறியவும், தமிழ்த் தேசிய அரசியல் ஆற்றல்களும் பெரியாரிய அரசியல் ஆற்றல்களும் ஒன்றுபடுவதற்கான புள்ளியை அடையாளம் காட்டவும் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற கருத்தரங்கை ஒழுங்கமைத்திருந்தோம்.
கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளன. சாதிய-மதவாத வன்முறைகள், மலையளவாக பெருகிவரும் ஊழல், இயற்கை வளச் சூறையாடல், ஜி.எஸ்.டி. வரி போன்று தொடர்ச்சியான மத்திய அரசின் மாநில அதிகாரப் பறிப்பு, டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு என அன்றாடம் மக்களும், இயக்கங்களும் போராடிவந்துகொண்டிருக்கிறோம்… தமிழ்நாட்டின் அரசியல்-பொருளியல்-பண்பாடு என்பது ஒவ்வொரு நிமிடமும் வளர்ச்சியும், பின்னடைவுமாக பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
தருமபுரி, மரக்காணம், நுதும்பல் இப்போது சேசசமுத்திரம் என சாதி கட்சிகளின் தலித் எதிர்ப்பு அரசியலால் தூண்டப்பட்டு, தலித் மக்கள் வாழும் சேரி குடியிருப்புகள் எரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சாதியிலும் ஒரு பகுதியினர் தங்களை மன்னர் பரம்பரையினர் என்று தம்பட்டம் அடித்து சாதிப்பெருமை பேசுவதும், அவர்களின் தலித் விரோதப் போக்கும், கௌவுரவத்தின் பெயரால் காதலித்து திருமணம் செய்யும் இளைஞர்களை ஆணவக் கொலைகள் செய்வதும், சாதிய வன்கொடுமைகளும் பெருகிவரும் இவ்வேளையில் இவற்றை எவ்வாறு தடுக்கப்போகிறோம்?
மக்கள் ஒற்றுமையை மறுத்து உள்நாட்டிலேயே சிறுபான்மையினரை பாகிஸ்தான்காரர்களாக்கி எதிரிகள் போன்ற மனநிலையை உருவாக்குவதன் மூலம் போலி இந்து மத ஒற்றுமையின் பெயரால் இந்திய ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்.-பா.ச.க. கும்பல் இன்று தமிழ்நாட்டிற்குள்ளும் ஊடுற பாதை அமைத்துக்கொண்டிருக்கின்றனர். பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் நூலின் சில பகுதிகளை பல ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு அவரது எழுத்துக்களை இந்து மதத் துவேசமாக காட்டி சாதி பஞ்சாயத்து செய்த பின்னணியில் செயல்பட்டது, ஆம்பூர் கலவரத்தைப் பயன்படுத்தி இசுலாமியர்களுக்கு எதிராக பேசுவது, பா.ச.க. தலைவர் அமித்ஷா முன்னிலையில் மதுரையில் பட்டியல் சாதியினர் சிலரை வைத்தே தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் எனப் பேச வைப்பது என்று காவிப் பயங்கரவாதக் கும்பலின் கை தமிழ்நாட்டிலும் நீள்வதைப் பார்க்கிறோம். இதை எப்படி முறியடிக்கப் போகிறோம்?
மன்னர் கால பெருமைகளுடன் பழைமைவாதச் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு தமிழைத் தாய்மொழியாய கொண்டிராத அனைவரையும் தமக்கு போட்டியாகவும் எதிரியாகவும் முன்னிறுத்தும் இனவாத அரசியல்தமிழ்நாட்டில் வேர் பரப்பத் தொடங்கியுள்ளது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
இம்மூன்று தரப்பினரின் தன்மைகள் பல நேரத்தில் சாதியத்தை காப்பதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்ளூர் கடற்கரை தாதுமணல் கிரானைட் கொள்ளையர்கள் வரை இயற்கை வளச்சூறையாடலை கண்டும் காணாமல் இருப்பதாகவும், முதலமைச்சர் கணவோடு இந்திய அரசமைப்பை எதிரக்காமல் சமரசம் செய்வதுமாகவும் இருக்கின்றன. இம்மூவருமே தங்கள் அரசியல் நலனுக்காக பெரியாரை மக்களுக்கு எதிராக நிறுத்துகிறார்கள். இப்படி இவர்கள் ஒன்றுபடும் புள்ளிகள் அன்றாடம் நடைமுறை அரசியலில் காண முடிகிறது.
தன் காலம் முழுக்க சமூக நீதிக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பகுத்தறிவு சிந்தனை வளர்ப்பதற்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார்.
சமூக நீதிக்கு முதல்படியாக இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த போராடிய களப்போராளி பெரியார். ஆனால் இன்று இட ஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது, சாதியை வளர்க்கிறது என்று சொல்லும் இன்றைய இளையத்தலைமுறையினர் பலர் அதே சாதி சடங்குக்குள்ளும், சாதியை பாதுகாக்கும் சுயசாதி திருமண உறவுக்குள்ளும்தான் இருப்பதை பார்க்கிறோம்.
இப்போதும் தொடரும் சமூக அநீதிகளுக்கு எதிராக, மாற்று அரசியலை வளர்க்கவும், சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தவும் பெரியாரின் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. வாருங்கள் உரையாடுவோம் தோழர்களே…
நண்பர்களிடம் இந்த நிகழ்வைப் பற்றிப் பகிருங்கள்… நண்பர்களையும் அழைத்து வாருங்கள்…..
தொடக்க உரை:
தோழர்.வினோத் களிகை, இளந்தமிழகம் இயக்கம்
தலைமை:
தோழர். செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்.
சிறப்பு உரை:
தோழர். இரமணி,
தலைமைக்குழு உறுப்பினர், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை
தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமை, சாதி அரசியல்
எழுத்தாளர் பீர் முகமது
தமிழகத்தில் ஊடுருவும் காவிப் பயங்கரவாதம்
தோழர். தியாகு,
ஆசிரியர், தமிழ்த் தேசம்.
கருத்துத் தளத்தில் வேர் பரப்பும் இனவாத அரசியல்
“பெரியாரும் தமிழ்த் தேசியமும்” நூல் பெறுபவர்கள் மாணவர் இயக்கங்களின் தலைவர்கள்.