தோழர் சி.மகேந்திரனை இளந்தமிழகம் இயக்கம் ஆதரிக்கின்றது

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் அவர்களை இளந்தமிழகம் இயக்கம் ஆதரிக்கிறது!

பதினெட்டு ஆண்டுகள் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் முதலில் தண்டனைப் பெற்று பிறகு விடுதலையான முதல்வர் ஜெயலலிதா, சட்ட சபைக்குள் போவதற்காகவே வருவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் இது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ச.க. வின் அருளாசி ஜெயலலிதாவுக்கு இருக்கிறதென்பது கடைசித் தீர்ப்பால் தெள்ளத் தெளிவாகியுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் அ.தி,மு.க. வுடனான பா.ச.க. வின் கூட்டணியை எதிர்பார்க்கலாம். அ.தி.மு.க.வோடு கைகோர்த்தபடி தமிழகத்தில் வலம்வருவது தேர்தல் கணக்கோடு சேர்த்து ஆர்.எஸ்.எஸ். ஸின் நீண்ட கால இலட்சியங்களுக்கும் துணை செய்யக்கூடும். அ.தி.மு.க. இந்துத்துவ அரசியலுக்கு எதிரல்ல என்பதைவிட இந்துத்துவ அரசியலின் மென்முகமாக விளங்கும் கட்சி என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் மதிப்பீடாகும். எது எப்படியாயினும் பாசிசத்தை நோக்கிப் படிப்படியாய் அடியெடுத்து வைக்கும் மைய ஆட்சிக்குப் பக்க பலமாய் நிற்கப் போகிறது அ.தி.மு.க. அரசு. பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு மையப்படுத்தப்பட்ட பொருளியல் கொள்கை தேவை.

 

அதை சாத்தியப்படுத்துவதற்கு மையப்படுத்த பாசிச அரசியல் தேவை என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் தேர்வாகவும் இன்றைய ஓர் அரசியல் யதார்த்தமாக இருக்கிறது. இதற்கெதிராக என்பதோடு இதற்கு மாற்றாக சனநாயக அரசியல் முகாமை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த மாற்று முகாமின் அடித்தளம் என்பது அரசியல் பொருளாதாரக் கொள்கை மாற்றில் கட்டியெழுப்பப்பட வேண்டும். பா.ச.க.வுக்கு மாற்று காங்கிரசு, அ.தி.மு.க. வுக்கு மாற்று தி.மு.க. என்பதைப் பழைய கதையாக்கி கொள்கை வழிப்பட்ட மாற்றை உயர்த்திப் பிடிக்க வேண்டும். 100 சதவிகித உடன்பாடு என்பதைவிட குறைந்தபட்ச ஆனால் கொள்கை வழிப்பட்ட உடன்பாடு என்ற முரண்பாட்டு விதியைக் கைகொள்ள வேண்டியதே நமக்கு காலமிட்ட கட்டளையும் வரலாறு தந்தப் படிப்பினையும் ஆகும். மேலும், அனைத்து அரசியல் மாற்றங்களும் தேர்தல் களத்திலேயே சாத்தியப்பட்டுவிடாது என்பது நிதர்சன்ம் என்றாலும் இன்றையக் கட்டத்தில் இந்த இடைத்தேர்தலை ஊழல் , பாசிசம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடையே கருத்து பரப்புவதற்கு பயன்படுத்த வேண்டியது அவசியம் என எமது இயக்கம் கருதுகிறது.

download

ஊழலை யதார்த்தமென்று  மக்களையே ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. வின் ’ஓட்டுக்குப் பணம்’ அரசியலுக்கு எதிரானப் போராட்டத்திற்கும், ஆளும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத அரசியல் பொருளாதார கொள்கைகளை  அம்பலப்படுத்துவதற்கும் கிடைத்துள்ள அரசியல் மேடையாக இத்தேர்தலைப் பயன்படுத்தும் நோக்கில்  ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் சி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் அவர்களை எமது இயக்கம் ஆதரிக்கிறது. தோழர் சி.மகேந்திரன் ஈழப் பிரச்சனையில் அறிவுப்பூர்வமான தலையீட்டின் மூலம் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தியவர். மக்கள் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போராட்டங்களுக்கு வலுசேர்ப்பவர். சுமார் 40 ஆண்டு கால அரசியல் அனுபவமும் தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான பரந்து விரிந்த சனநாயக முகாமைக் கட்டியெழுப்புவது குறித்து ஆழமான, உரத்த சிந்தனை உடையவர்.

 

முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு, தண்டனை, விடுதலை ஆகியவற்றிற்கு பின்னான தேர்தல் என்ற வகையில் நாடு தழுவிய கவனம் பெற்றிருக்கும் இத்தேர்தலில் சி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் தோழர் சி.மகேந்திரனை ஆதரித்து இணையதளத்திலும் தேர்தல் களமுனையிலும் பரப்புரை செய்வதன் மூலம் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றத்திற்கான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

 

தோழமையுடன்,

தி.செந்தில் குமார்,

ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *