முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – ஆறாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்!

eezham_4

முள்ளிவாய்க்கால் – பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு, நான்காம் கட்ட ஈழப்போர் முடிந்த இடம்.  இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்று வரை சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கையில் உச்சம் தொட்ட நாட்கள் 2009, மே 17,18,19 ஆகும்.

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பதிவேடுகளின் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வன்னியில் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்த பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள்  2 இலட்சத்து 70 ஆயிரம் பேர். ஆக, மொத்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் காணவில்லை. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு அதாவது 30% தமிழ்மக்கள் ஒராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் மொத்தம் 15 இலட்சம் பேர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் படுகொலை செய்யப்பட்டனவர். இது பத்தாண்டு காலத்தில் நடந்தது. வியட்நாம் மக்கள் தொகையில் 6% பேர் படுகொலையானார்கள். பத்தாண்டு காலத்தில் 6% பேர் படுகொலை செய்யப்பட்டதையும் ஒராண்டு காலத்தில் 30% பேர் படுகொலை செய்யட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்தில் தமிழ் மக்கள் சந்தித்துள்ள மனித உயிரிழப்புகளின் கொடூரத்தை உணர முடியும்.

11295565_900788646644612_1829420165030538411_n

கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மட்டுமல்ல. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி வகைதொகை இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள். சாவின் திசையில் முள்ளிவாய்க்காலை நோக்கி இடம் பெயர்ந்த நாட்களின் நினைவுகளையும் துப்பாக்கிகள் ஏந்திய சிங்கள இராணுவத்திடம் தாயும் நிர்வாணமாக தாயின் முன் மகனும் நிர்வாணமாக, தந்தையும் நிர்வாணமாக தந்தைக்கு முன் மகளும் நிர்வாணமாக, பாட்டனும் நிர்வாணமாக பாட்டன் முன்பு பேரன், பேத்தியும் நிர்வாணமாக சாரை சாரையாக சரணடைந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட நினைவுகளையும் சுமந்தபடி ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  ஒட்டுமொத்த மனித குலத்தின் மாண்புகளையும், நாகரிகத்தையும் கேள்வி கேட்டப்படி அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கானோர் முன்பு சரணடைந்தவர்களில் பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் உயிருடன் இருக்கிறார்கள்? இல்லையா? என்பது கூட இன்றுவரை தெரியவில்லை.

ஈழம், தமிழ்நாடு, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாய் கடந்த ஆண்டு இந்நேரத்தில் இறுதிக் கட்டப் போரில் நடந்த சர்வதேச சட்ட விதி மீறல்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு புலனாய்வு குழுவை  ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. நீதி வேண்டும் என்ற வேட்கையுடன் தமிழ் மக்கள் சிங்கள இராணுவம் இழைத்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் அக்குழுவிடம் கொடுத்தனர். 2015 ஆண்டு மார்ச் மாதம் அந்தக் குழு புலனாய்வு  அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சமர்பித்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானதைக் காரணம் காட்டி அறிக்கை சமர்ப்பிப்பதை செம்டம்பர் மாதக் கூட்டத் தொடருக்கு தள்ளிப் போட்டுள்ளன இந்திய அமெரிக்க அரசுகள்.

அன்று போருக்கு ஆயுதம் கொடுத்து, ஆலோசனை தந்து , சர்வதேச நாடுகளிடையே ஆதரவு திரட்டி இனப்படுகொலைக்கு துணை நின்ற இந்திய அரசு இந்த நிமிடம் வரை சிங்கள அரசை இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறது. இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், அரசியல் தீர்வுகான ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கிழித்து இந்தியப் பெருங்கடலில் வீசிய படி இலங்கைக்கு பயணம் போனார் இந்தியப் பிரதமர் மோடி. சீனாவின் துறைமுகத்தை இடைக்காலமாக நிறுத்தச் செய்துவிட்டு, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தங்கு தடையின்றி இலங்கைக்கு போய் வர ஏற்பாடு செய்துவிட்டு இலங்கைத் தீவில் இந்தியச் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை முடித்து வந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி தவறியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைக் குற்றமென்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தும் தமிழர்களின் குரலை எதிரொலிக்கவில்லை. இலங்கை மீதானப் பன்னாட்டுப் புலனாய்வைத் தடுத்து நிறுத்தியதைத்தான் தனது நூறு நாள் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய மாபெரும் சாதனையாக இலங்கை அதிபர் மைத்ரி அறிவித்துள்ளார்.

”ஆட்சி மாற்றம்” என்று சொல்லி ஈழத் தமிழர்கள் கோரும் நீதியைப் புதைக்கப் பார்க்கின்றன அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்திய நாடுகள். இராசபக்சே இடத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் மைத்ரிதான் 2009, மே 17,18,19 ஆம் நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் என்ற ஒற்றை உண்மை போதும் இனப்படுகொலையில் அவர் வகித்த பங்கைப் புரிந்து கொள்வதற்கு. 1948 முதல் இன்றுவரை இலங்கை அரசுக்கு தலைமை வகித்த டி.எஸ். சேனநாயக்கா தொடங்கி இராசபக்சே, மைத்ரி வரை யாவரும் தமிழின அழிப்பைச் செய்தவர்கள் தான். இலங்கை அரசு ஓர் இன அழிப்பு அரசு. ஆட்சிகள் மாறினாலும் இந்தியச் சிங்களக் கூட்டு மாறவில்லை. தமிழின அழிப்பும் நிற்கவில்லை.

”வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ!” சிங்கள இராணுவத்தின் போர்க் கொலைகளில் சிக்குண்ட தமிழ்மக்கள் மீண்டெழத் தொடங்கிவிட்டனர். வடமாகாண சபை முதல்வர் விக்னேசுவரன் கடந்த மார்ச் மாதம் பன்னாட்டுப் புலனாய்வு அறிக்கையைச் சமர்பிக்க வேண்டுமென்று சொன்னார். சிங்கள இராணுவப் பிடியில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரியும் சிங்கள இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கோரியும் நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும் தமிழீழ மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டனர். இழந்த உறவுகளின் நினைவைச் சுமந்தபடி மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளமென திரள இருக்கிறார்கள். இனப்படுகொலையை வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கப் போகிறார்கள். முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. மண்ணில் புதைந்து போனவர்கள் விதையாகிப் போனவர்கள் என்பதைக் மக்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சர்வதேச துணையாக  இந்திய அரசே இருந்து வருகிறது. அரசற்ற ஈழத் தமிழரின் சர்வதேச துணை தமிழ்நாடுதான்.

  • இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும். உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது.
  • அரசியல் தீர்வு காணப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 13 ஆவது சட்டத் திருத்தம் ஓர் அரசியல் மோசடி.
  • தமிழர் பகுதிகளில் இருந்து சிங்கள இராணவத்தை வெளியேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளைக் சிங்களக் காலனியாக்குவதைத் தடுத்திட வேண்டும்.

இந்திய அரசை இக்கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வலிமை நமக்கே உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துவரும் இனப்படுகொலைக்கு நீதி மறுக்கப்படுமாயின் அது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் பர்மா, நேபாளம் மக்களின் மீது அந்தந்த நாடுகளின் அரசுகள் இனப்படுகொலை செய்வதற்கு முன்மாதிரியாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே,  ஈழத் தமிழருக்கான நீதியிலும் பாதுகாப்பிலும் நம் எல்லோருக்குமான பாதுகாப்பும் அடங்கியுள்ளது.

ஈழ இனப்படுகொலை மானுட நாகரிகத்தின் மீதானத் தாக்குதல்!

ஈழ விடுதலை மானுட விடுதலை!

ஈழத் தமிழர்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டியது நமது கடமை!

—இளந்தமிழகம்

One thought on “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – ஆறாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்!

  1. நினைவின் வடுளில் மீண்டும் கசிகிறது குருதி, இதைப் படித்து!

    இலங்கையில் நம் ஈழத் தமிழ் மக்கள் மீண்டும் திரண்டெழத் தொடங்கி விட்டார்கள் என்கிற அந்த இரண்டு வரிகள் மிக்க ஆறுதலை அளிக்கின்றன. நல்லது நடக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நானும் உங்களுடன்! இப்படி ஓர் உணர்வுமிகு பதிவுக்காக நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *