ஊர்க்குருவிகளின் இரண்டாவது கீச்சு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கவுத்தி – வேடியப்பன் மலைகளில் இருந்து ஜிண்டால் குழுமத்தால் இரும்புத்தாது வெட்டியடுக்க குறியிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்தலும். அப்பகுதி சார்ந்த மக்களிடம் அது குறித்த உரையாடுதலும் என்பதான பயணத் திட்டத்தோடு ஊர்க்குருவிகளின் (இரண்டு நாள்) இரண்டாவது பயணம் டிசம்பர் இருபத்தியாறாம் நாள் இரவு திருவண்ணாமலை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம் ……

வறட்சிக்கு பெயர்போன இம்மாவட்டத்தில் நகரின் மலைசுற்றுபாதையில் இருந்து சரியாக நான்கு கிலோமீட்டர் தொலைவுக்குள் தொடங்கிவிடுகிறது கவுத்தி-வேடியப்பன் மலையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் காப்புக்காடுகள்,நகரின் நடுப்பகுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் இம்மலைகளை அடைந்துவிடலாம். ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான பயன்களை அம்மக்களுக்கு அளித்து வருகிறது கவுத்தி-வேடியப்பன் மலைகள்.இங்கு வளமான விவசாயத்திற்கு நீர் ஆதாரமான நீரை உறிஞ்சி தேக்கி வைத்து இயற்கையான அணையாய் விளங்குகிறது இம்மலைகள்…

10931464_903871192979069_6391095441626718192_n

ஏராளமான இயற்கை வளங்களையும், எண்ணிலடங்கா மரம், செடி கொடிகளையும், அரியவகை உயிரினங்களையும், தமிழகத்தின் வறட்சியை அவ்வளவாகத் தனது மக்களுக்கு உணரச்செய்யாத, சுற்றிலும் ஐம்பத்தியொரு கிராமங்களைத் தன்னகத்தே கொண்டு, இன்றும் அவர்களின் இயற்கை அன்னையாய் பெரிதும் போற்றப்படுவது தான் கவுத்தி – வேடியப்பன் மலைகள்.

கவுத்தி-வேடியப்பன் மலைகளில் வனத்துறைக்குச் சொந்தமான 325 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாது எடுக்க ஜிண்டால் குழுமம் 2008-09ஆம் ஆண்டுகளில் முயற்சித்தது. இதன் மூலம் 26,918 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதுடன் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 51 கிராமங்களில் உள்ள இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். மேலும் அவ்வனப்பகுதில் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அறிய வகை மூலிகைகளும் அழிக்கப்பட்டுவிடும். இச்சுரங்கத்திற்காகத் தாதுப்பொருளை பிரித்தெடுக்க நாளொன்றுக்கு 560 கன மீட்டர் நீர் தேவைப்படும். இதற்காக 25 கி.மீ தூரமுள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணைக்கட்டிலிருந்து பெரிய ஆழ்குழாய் மூலம் உறிஞ்சப்பட்டு, சுற்றியுள்ள ஐம்பதிற்கும் அதிகமான‌ கிராமங்களின் ஒட்டுமொத்த நீராதாரமே அழிக்கப்பட்டுவிடும். அதுமட்டுமில்லாது மலையைத் தோண்டி இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் அதிர்வு சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள கிராமங்களைப் பாதிக்கும், இரும்புத்தாது தூசுக்கள் மற்றும் அதன் கழிவுகள் மூலம் நுரையீரலை பாதிக்கும் நோய்கள், தோல் சம்பந்தமான வியாதிகள், குடிநீரில் பாதிப்புகள் என விளைவுகள் விரிவடைந்து கொண்டே செல்லும். இறுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் விவசாயம், சுற்று சூழல், சுகாதாரம், நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் என முற்றிலும் அழிக்கப்பட்டு மக்கள் பாரம்பரியமாகத் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்..

10500575_903871199645735_4719993067008731435_n

ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து ”தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்” டிம்கோ என்ற நிறுவனத்தை உருவாக்கி இருந்தது.இதில் ஜிண்டால் குழுமத்திற்கு 99 சதவீத பங்குகளும், டிட்கோவிற்கு 1 சதவீத பங்கும் இருக்கின்றன. இத்திட்டத்தை கொண்டு வந்ததில் இரு திராவிட கட்சிகளுக்கும் பங்குண்டு.அதிமுக மற்றும் திமுக என இவ்விரு கட்சிகளின் ஆட்சியும் ஜிண்டால் நிறுவனத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்து வந்தன. இதற்கெதிராகத் திரண்டெழுந்த மக்களின் போராட்டங்களின் விளைவாக 2008ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய அறிக்கையின் விளைவாகவும் அப்போதைக்கு இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஜிண்டால் குழுமத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கவுத்தி-வேடியப்பன் மலைகளில் சுரங்கம் அமைக்காது சுமார் 23 ஹெக்டேர் நிலப்பரப்பில் மேல் இருந்து மட்டும் இரும்புத்தாது எடுக்க ஜிண்டால் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. நிலப்பரப்பு அளவினை குறைத்து விண்ணப்பித்து இருந்தாலும் முன்பு போலவே மலைகள் முழுக்க ராட்சத இயந்திரங்கள் கொண்டும் வெடி வைத்தும் தகர்க்கப்படும், காடுகள் முழுமையும் இருக்கின்ற சுமார் மூன்று லட்சம் மரங்களும் அழிக்கப்படும், விவசாயத்திற்கான மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள், மக்களின் குடிநீர் தேவைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சுற்று சூழல் மாசு மற்றும் சுகாதார கேடு காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவர். மக்களின் வாழ்வாதார சூழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவ்விடங்களை விட்டு மக்கள் வெளியேற்றப்படுவர்… தற்போது மாநில மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற பல உண்மைகளை மறைத்து இத்திட்டத்தை செயல்படுத்த ஜிண்டால் நிறுவனம் மீண்டும் அனுமதி பெற்றிருக்கிறது…

10947167_903871179645737_7757541636152501171_n

பல ஆண்டுகளுக்கு முன் வறட்சியும், பஞ்சமும் நிலவிய கொடுமையான கால கட்டத்திலும், இம்மலைகளில் ஏராளமான மரங்கள் நீரின்றி காய்ந்து கருகிய போதும், வயிற்றுபாட்டுக்கு வழியின்றி காய்ந்த விறகுகளையும், சுள்ளிகளையும் பொருக்கி அருகிலிருக்கும் திருவண்ணாமலை நகரத்தில் விற்று , கொடுங்காலத்தை கடத்தினரே தவிர,அப்போது கூட ஒரு பச்சை மரத்தை வெட்டி வாழ்ந்தவர்கள் அல்லர் இவர்கள்.மலையில் ஒரு மரத்தை வெட்டக்கூடப் பொறாமல்வெகுண்டெழும் மக்கள்,பச்சை பிள்ளை போல் இருக்கும் மலையை எப்படி வெடிவைத்து தகர்க்க அனுமதிப்பார்கள்..?

இம்மலைகளைப் பற்றிய பல அடிப்படை வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், மேலும் அது தொடர்பாகப் போராட்டக்குழு உறுப்பினர்களுடனும், அப்பகுதி சார்ந்த மக்களுடனும் கலந்துரையாடவும் பூவுலகின் நண்பர்களின் கவுத்தி-வேடியப்பன் மலையை காப்போம் என்கிற புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது….

தோழர் அருள் நடராசன் அவர்களுடன் நமது இயக்கம் குறித்தும், ஊர்குருவிகள் உருவானதற்கான காரணங்கள் மற்றும் அன்றைய நாளின் பயணத் திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதும் கவுத்தி – வேடியப்பன் மலையை நோக்கி பயணமானோம் .

எங்கெங்கு காணினும் சிறிதும் பெரிதுமாக இடைவெளியின்றி மரங்கள், செடி கொடிகள் என கவுத்தி-வேடியப்பன் மலை தன் மேனியெங்கும் பச்சை ஆடை உடுத்தியிருந்தது, மலைமேல் இருந்து கிராமங்களைப் பார்க்கவும் ஊர்முழுக்க வயல்வெளிகளும் தன் பங்கிற்கும் பச்சை ஆடையையே தனதாக்கிக்கொண்டிருந்தது….இந்த சூழ்நிலையே கூட மலையை சுற்றி இருக்கின்ற மக்களை காடுகளையும் தங்கள் வீடுகளாகப் பாவித்து வாழ்ந்து வருவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம்…. மலைகளை சுற்றி இருக்கும் நீர்தேக்கங்கள் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளையும், நிலத்தடி நீரை எல்லா காலங்களிலும் குறையாமல் இருக்கசெய்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

கிராமத்துக்குள் நுழையும் போதே அனைவரது பார்வையும் ஒரு வித சந்தேகத்துடனே எங்களை நோக்கியதை யாரும் கவனிக்கத் தவறவில்லை, தோழர்கள் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை எனலாம்,, பலரது பேச்சில் அவர்களின் இப்போராட்டத்திற்கான அடிப்படை காரணங்களும், அதன் விளைவுகளும் முழுமையாகவும், சரியான முறையிலும் புரியவைக்கப்பட்டிருந்தது உண்மையில் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இவர்களின் போராட்டம் சிலரிடத்தில் கோபமாகவும், சிலரிடத்தில் ஆதங்கமாகவும், சிலரிடத்தில் கடமையாகவும் வெளிப்படுத்தியது… போராடும் களத்தில் சில அரசியல் உள்ளீடுகள் இருந்தாலும் ஜிண்டால் குழுமத்தை எதிர்ப்பதில் இவர்களின் மன உறுதியை அசைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை என்பதே உண்மை. இத்தகைய மனஉறுதி ஐம்பத்தியொரு கிராம மக்களிடத்திலும் சுலபத்தில் நிகழ்ந்து விடவில்லை, அந்த ஒருங்கிணைப்புக்கு பல மாதங்கள் தேவை பட்டதும், பல அவமதிப்புகள் மற்றும் இழப்புகளை கடந்தே இந்த புரிதலை மக்களிடம் ஆழமாகப் பதிந்திருக்கிறார் தோழர் குமாரும், அவரது நண்பர்களும்….அது மட்டுமல்லாமல் உலக அளவில் ஜிண்டால் குழுமத்தின் செயல் பாடுகள் பற்றியும், மீத்தேன் போராட்டம் , கூடங்குளம் மற்றும் இந்தியாவில் வேறு எங்கெல்லாம் கனிம வளங்கள் மக்களை மீறி அதிகார வர்க்கத்தால் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருகிறது என்பதனையும் அதன் விளைவுகள் எவ்வாறாக இருந்தது என்பதையும் கூட விவாதிக்கும் அளவுக்குப் புரிதலை அநேகமாக எல்லாரிடத்திலும் காண முடிந்தது ….

1499362_903871169645738_8105294111571762103_n

கவுத்தி-வேடியப்பன் மலைகள் குறித்த போராட்டம் இவர்களோடு முடிந்து விட போவதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தவர்களாகவே உள்ளனர். முந்தைய தலைமுறை எவ்வாறு போராட்டத்தின் தன்மை மாறாமல் இவர்களிடத்தில் விட்டுசென்றதோ, அதில் துளியும் மாற்றம் இல்லாமல் இவர்கள் நாளைய தலைமுறைக்கும் கொடுக்கத் துவங்கியுள்ளனர்..இத்தனை மனஉறுதி கொண்ட மக்களை இன்னும் எத்தனை தலைமுறை கண்டாலும் வீழ்த்த இயலாது…..

அடிப்படையில் நானும் கிராமவாசி தான் என்பதாலும், திருவண்ணாமலை எனது அண்டை மாவட்டம் என்பதாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடும் அளவிற்கு வித்தியாசங்களை என்னால் காண முடியவில்லை…. ஆனால் இவர்களின் ஒற்றுமையும், தன்னம்பிக்கையும் எந்தவொரு கிராமவாசிகளிடமும் காண இயலாதது. மக்கள் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும், சாதி, மத ரீதியாகவும் பிரிக்க நினைப்பவர்களுக்கு இந்த கிராம மக்கள் சரியான சவுக்கடியாக இருப்பார்கள்… மனிதத்தை மறந்து வாழ்கிற நகரத்து மக்கள் இவர்களிடத்தில் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு……இரண்டு நாட்களும் சொர்க்கத்தில் வசித்த சுகத்தோடு நகரத்தை (நரகத்தை) நோக்கி பயணமானோம்…

தோழர்.முனுசாமி
இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *