புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலகம் முன்பு அடாவடித்தனம் செய்த‌ இந்து முன்னணியினரை இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு அடாவடித்தனம் செய்த இந்து முன்னணியினரைக் கண்டிக்கின்றோம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளிப் பண்டிகை குறித்து தீபாவளி அன்று மாலை நடந்த ’நேர்படப் பேசு’ நிகழ்ச்சியைக் கண்டித்து இந்து முன்னணியினர் இன்று (23 அக்டோபர்) காலை அதன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துக்களின் மனம் புண்படும்படி கருத்துக்கள் பேசப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி மிகவும் தரம் தாழ்ந்த வகையில், நாகரீகமில்லாமல் பேசியுள்ளனர். https://www.youtube.com/watch?v=6ZvAE2CyE1k

இது மாறுபட்டக் கருத்துக்களை விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இதுவரை எந்த ஒரு இயக்கமோ கட்சியோ இதில் நடந்த விவாதித்திற்கு எதிராக புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது இல்லை. இராவண காவியம் கண்ட தமிழ்மண்ணின் வரலாற்றை மறந்த சங்பரிவாரக் கும்பல் மத்தியில் ஆட்சியில் பாசக இருக்கிறது என்கிற அதிகாரத் திமிரில் இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

தான் விரும்பாதக் கருத்து வெளிப்படவேக் கூடாது என இந்துத்துவ வெறியர்கள் வன்முறையில் ஈடுபடுவது நாட்டின் கருத்துரிமைக்கு விடப்பட்ட சவால், சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்தை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியே இது.

சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பு செய்தது மத்திய அரசின் தொலைக்காட்சியான ’தூர்தர்ஷன்’. இப்படி நடந்தது இதுவே முதல்முறை. இந்தியா மதசார்பற்ற நாடு என்பதை மாற்றி காவிமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் பாசக தலைமையிலான மத்திய அரசின் இந்துத்துவ நகர்வுகளில் இது ஒன்று. அரசு தொலைக்காட்சியையே தங்களுடைய பிரச்சார ஊடகமாக பயன்படுத்திவரும் சங்பரிவாரங்கள் எந்த வெட்க உணர்ச்சியுமின்றி இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதைப்போல கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவ கும்பலின் அராஜகங்கள் நாடெங்கும் வெளிப்பட்டு வருகிறது.

Trishul-Red-Varanasi

கடந்த பிப்ரவரியில் மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (ஐஐடி) பேச வந்தபோது அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள் அவரின் கருத்திற்கு எதிராக கேள்வி கேட்பதுபோல் அவரைப் பேசவிடாமல் தடுத்தனர். அது ஒரு மோசமான முன்னுதாரணமாக சனநாயக உணர்வு கொண்டவர்களால் பார்க்கப்பட்டது. கடந்த வாரத்தில் ராவணனைப்பற்றிய விவாதம் ஒன்றை தில்லி ஜவஹருலால் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தார்கள், அதில் புகுந்த பாசக மாணவர் அணியினர் (ஏபிவிபி) அங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கி, மாணவர் விடுதியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் (http://www.countercurrents.org/vakumar161014.htm).

இதுதான் கருத்துரிமை குறித்தான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துத்துவ வெறியர்களின் நடைமுறையாக இருக்கிறது. அது ஊடகமாக இருந்தாலும், கல்விச்சாலையானாலும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கவே பார்க்கின்றனர்.

கருத்துரிமைக்கு எதிரான இந்து முன்னணியினரின் அடாவடித்தனத்தை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

செந்தில்
ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *