பாலினப் பாகுபாடுகளும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

பாலினப் பாகுபாடுகளும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் – கருத்தரங்கம்

நாள்: அக் 15, 2014  புதன்கிழமை மாலை 5 மணி

இடம்: மூட்டா (MUTA) அரங்கு, காக்காத்தோப்பு தெரு, மதுரை 

உரை:

பெண்ணியம் பன்முகப் பார்வை – முனைவர் முரளி

பெண்ணுரிமை இயக்கங்களும் அதன் நடைமுறைகளும் – மேரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும்

பேராசிரியர் சாசுலின் பிரிசுல்டா

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் – பரிமளா, இளந்தமிழகம் இயக்கம்

செப்டம்பர் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருமங்கலத்தில் தன் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் இருவர் மீது அமில வீச்சு நடந்தது. இந்த தாக்குதலில் மதுரை காமராஜர் பல்கலைகழக உறுப்புக் கல்லூரியில்  பி.ஏ. ஆங்கிலம் படித்துவரும் மாணவி மீனாவின்முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட உறுப்புகள் கருகின. மேலும், அமிலம் சிதறி தெறித்ததில் அருகில் சென்ற அங்காள ஈஸ்வரி என்ற மாணவிக்கும் தோள்பட்டை, கைகள் வெந்தன.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் உசிலம்பட்டி வட்டத்தில் அக்டோபர் 2 ஆம் நாள் காதல் திருமணம் செய்த விமலா தேவியை அவரது பெற்றோர்களே கொலை செய்தனர். இது சாதியை காக்க நடந்த கெளரவக் கொலையாம்!

அமில வீச்சு, கெளரவக் கொலைகள், பாலியல் சீண்டல், வன்புணர்ச்சி என்று பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. கடந்த ஆண்டில் தான் புதுச்சேரியைச் சேர்ந்த வினோதினியும் சென்னையைச் சேர்ந்த விதியாவும் அமில வீச்சுக்கு பலியானார்கள். இப்போது முதன் முறையாக இந்த கொடுமை தென் தமிழகத்தில் நடந்துள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற காலம் மாறியது. பருவம் வந்தவுடன் பெண்ணுக்கு திருமணம் செய்து கடமையை முடித்ததாகக் கருதும் பெற்றோரின் மன நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கிய காலமிது. ஏழை எளியப் பின்னணி கொண்ட அடித்தட்டுப் பெண்கள் கல்லூரிகளுக்குள் காலடி வைக்கும் காலமிது. ஆனால் அந்தக் கல்வி பெறும் உரிமைக்கு வேட்டு வைப்பது போல் இது போன்ற அமில வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

வன்புணர்ச்சி என்பது சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெண் மீது தொடுக்கப்படும் அதிகபட்ச பாலியல் வன்முறை. ஒரு நாள் தொடங்கி முடிவதற்குள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி பெண் மீது எத்தனையோ வன்முறைகள்! பாலியல் சீண்டல், கிண்டல் செய்பவர்கள் தொடங்கி பேருந்தில் உரசுபவர்கள், கூட்ட நெரிசலில் வேண்டுமென்றே இடித்துச் செல்பவர்கள் என்று  இவர்களுக்கு எல்லாம் பெண் காம உணர்வைத் தூண்டும் சதைக் குவியல். பெண்ணைப் போகப்பொருளாகவோ, பிள்ளைபெறும் இயந்திரமாகவோ காணும் இந்த ஆணாதிக்க சமூகத்தைப்  பொறுத்தவரை பெண்ஆணின் மற்றும் ஓர் உடைமை. அவன் இச்சைக்கு இணங்க மறுத்தால் வாழத் தேவையற்றவள்.அவன் காதலை ஏற்காவிட்டால் அமில தாக்குதலுக்கு ஆளாகிறார். ஏன் எனில், பெண்ணின் இருத்தலே ஆணின் இன்பத்திற்கென்று கருதுவதால்  பெண்ணைக் கொல்லாமல் கொன்ற கொக்கரிப்புஅவனுக்குள்.

ஆணோ, பெண்ணோ யாரேனும் ஒருவர் பெண்ணை அடக்க நினைத்தால், பெண் மீது ஆதிக்கம் செய்ய நினைத்தால், பெண்ணைத் தோற்கடிக்க நினைத்தால் பாலியல் வன்முறையே அவர்களின் கருவி. சாதித் தாக்குதலில் ஆணை வெட்டிக் கொல்வதில் ஆதிக்கம் நிலை நிறுத்தப்படும். ஆனால், பெண்ணையோ…?சாதி பெண்ணின் கருப்பையில்தான் பாதுகாக்கப்படுகிறதாம். பெண்ணால் சிந்திக்க முடியும். தன் துணையைத் தானே தேர்வு செய்ய முடியும் என்பதை இந்த சமூகம் ஏற்பதில்லை. அப்படி அவள் தன் துணையைத் தானே தேர்வு செய்தால் அவள் சாதியின் கெளரவத்தைப் பாழாக்க வந்தவள் என்று கொல்லப்படுகிறாள். கள்ளிப்பாலுக்குப் பெயர் போன உசிலம்பட்டியில் விமலா தேவி கெளரவக் கொலை ஆளானது இதனால் தான். சொந்த சாதியாலே பலி கொடுக்கப்படுவள் பெண் தான்.

1779783_794135493985516_5184461198570819205_n

பெண்கள் மீது இப்படியான வன்முறைகள் நடக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்களுக்குதான் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அள்ளி அள்ளி கொடுக்கிறது நம் சமூகம். பெண் எங்கு செல்ல வேண்டும், என்ன ஆடை அணிய வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும்,  முகத்தைக் காட்டலமா? என்று பெண் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் எண்ணத்தோடு ’அக்கறையாகப்’ பாடம் எடுக்கின்றனர். இன்னொருபுறம் கடுமையான சட்டங்கள், விரைவு நீதிமன்றங்கள், ஹெல்ப் லைன் நம்பர்கள் என்று பெண் உடலையும், உயிரையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு..

ஆனால், பெண்கள் மீதான வன்முறைகள் – பெண்ணின் உடலைத் தாண்டி பெண்ணின் உரிமையோடு தொடர்புடையது. உணர்வும், சுயசிந்தனையும், சொந்த விருப்பமும் உள்ள மனிதராக பெண்ணை அங்கீகரிக்க மறுப்பதன் வெளிப்பாடு; பொருளைப் பெட்டிக்குள் பூட்டிப் பாதுகாப்பது போல், பெண் உடலையும் உயிரையும் பாதுகாக்க நினைத்து, பெண்ணின் உரிமையை மறுக்க நினைப்பவர்களை நோக்கி பெண்களின் உரிமைக் குரல் உரக்க எழ வேண்டிய தருணம்.

’நான் ஒரு காமப் பொருள் அல்ல. நான் ஒரு பெண்’

இந்த சமூகத்தில் சரி பாதி

கல்வி எனது பிறப்புரிமை.

எனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையும் எனது பிறப்புரிமை.

கள்ளிப்பால், மண் எண்ணை, அமிலம், பாலியல் வன்கொடுமை எதுவரினும் நான் அழப் போவதில்லை..விழப் போவதுமில்லை.

எனது பிறப்புரிமைகளுக்காக சுயமரியாதைக்காக மீண்டும் மீண்டும்   எழுவேன்..தனித்தல்ல…பெண்ணினமாய்..!

 

 

 

One thought on “பாலினப் பாகுபாடுகளும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

  1. Very good article.. ladies respecting other ladies by showcasing themselves as good woman in behavior, costume wearing, giving respect to other human can join hands in bringing up of victims

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *