ஜெயலலிதா மீதான தீர்ப்பை வரவேற்கின்றோம் – இளந்தமிழகம் இயக்கம்

 

ஊடக அறிக்கை

ஊழல் கட்சிகளை ஆதரிப்பதல்ல, அரசியல் நேர்மை கொண்ட மக்கள் திரள் இயக்கங்களை வளர்த்தெடுப்பதே உடனடி தேவை.

 

கடந்த சனிக்கிழமை செப் 27, 2014 ஆம் நாள் சொத்துக் குவிப்பு வழக்கில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா , அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது  காலம் தாழ்த்தி வந்த தீர்ப்பு என்று வருந்த வேண்டியதே ஆகும். வெறும் 66 கோடிக்காகவா  நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை? என்று சிலர் வருந்துவதும்  போராட்டங்கள் நடத்துவதும் அரசியலைப் பணம் கொழிக்கும் தொழிலாக கருதுவதையே காட்டுகிறது.

 

 

1991 – 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சி நடத்திய காலத்தில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணம் அத்தனை ஆடம்பரமாக நடத்தப்பட்டதைக் கண்டு கொதித்தெழுந்த மக்கள் தேர்தலின் போது அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பளித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பேற்றது அதிமுக. அது அன்று மக்கள் தேர்தலில் கொடுத்த தீர்ப்பு. 1996 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்குக்கு 18 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் சரியான மாற்று இல்லாத காரணத்தால், மீண்டும் இரண்டு முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

ஆட்சியில் இருந்த காலத்தில் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்ததற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஒருவர் தான்,  அதற்கு பிறகு இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளார் என்றால் அடுத்த அடுத்தக் காலங்களில் அவரும் அவரைச் சுற்றி இருக்கும் சசிகலா குடும்பத்தாரும் அந்த கட்சியும் எவ்வளவு கொள்ளையடித்திருக்கும்! இந்தியா விடுதலைப் பெற்ற காலந்தொட்டு ஊழல் நடந்துக் கொண்டிருந்தாலும் உலகமயமாக்கலுக்குப் பின் நடந்தேறிவரும் ஊழலின் அளவு மிகப் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் ஊழல் தொகைகள் ஆயிரக்கணக்கான கோடிகளைத் தொடுகின்றன. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு கை மாறும் பணம் மிகப் பெரியது. காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அதிமுக  என்றெந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லாக் கட்சிகளும் இரக்கமற்ற வகையில் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்தன; கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன.

 

 

சங்கிலி பறிப்பு, வீட்டுத் திருட்டுகளுக்கு மட்டுமே கடுமையாகப் பாயும் நமது சட்டம் நாட்டையே கொள்ளை அடிக்கும் அரசியல் தலைவர்களை நோக்கி நிதானமாகத்தான் பாய்கிறது. இது போன்ற ஊழல் தலைவர்களின் ஒட்டுமொத்த சொத்தையும் முடக்குவதும் அதை அரசுடைமையாக்குவதும்தான் சட்டம் செய்ய வேண்டியதாகும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் மேல் முறையீடு செய்து இந்த தீர்ப்பை உடைத்து அந்த ஊழல் பேர்வழிகள் அரசியல் அரங்கில் தலை நிமிர்ந்து நடைபோடும் நிலைமையே இன்று நாட்டில் இருக்கிறது.

jayalalitha-convicted

 

நீதிமன்றங்கள் நத்தை வேகத்தில் நகர்கின்றன. தேர்தல் மன்றங்களில் அ.தி.மு.க. வுக்கு மாற்றாக அதைவிட ஆழ அகலமாக ஊழல் செய்கிற தி.மு.க. வே பல்லிளித்துக் கொண்டு நிற்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து அதில் சில சில்லறைக் காசுகளை மக்களுக்கு வீசி எறிந்து வாக்கு கேட்கிறார்கள். இப்படி தேர்தல் நேரத்தில் கிடைக்கும் தேர்தல் பிச்சைக்காகவும், மக்கள் பணத்தில் இருந்து எடுத்துத் தரப்படும் இலவசங்களுக்காகவும் ஏங்கி நிற்பவர்களாக தமிழ் மக்களை மாற்றியதுதான் தி.மு.க. வும் அ.தி.மு.கவும் ஓரணியில் இருந்து செய்து காட்டியுள்ள 50 ஆண்டு கால சாதனையாகும். தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? என்று சொன்ன கருணாநிதி ஒருபுறமும் குடநாட்டு பங்களாவில் வாழ்ந்து கொண்டு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவதாக வேடம் போடும் ஜெயலலிதா இன்னொருபுறமும் இவர்களுக்குப் பின்னால் முடிந்த வரை ஊர்ப் பணத்தை சுருட்டும் அடுத்தக் கட்ட தலைவர்கள் மறுபுறமும் என்று நமது அரசியல் யதார்த்தம் வெட்கித் தலைகுனிவதாக இருக்கிறது. அரைகுறை சனநாயகத்தைக் கூட வழங்காத தேர்தலையும், உளுத்துப் போன நீதிமன்றங்களையும் மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டின் வளங்களைக் கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, முடிந்த வரை மக்கள் சொத்தைச் சூறையாடி, தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை இன்னும் சீரழித்து, அடிமை உணர்ச்சியின் இருப்பிடமாய் தமிழ்நாட்டை மாற்றாமல் இந்த கோபாலபுரம் கூட்டமும் போயஸ்தோட்டத்துக் கூட்டமும் ஓயப்போவதில்லை.

 

 

மாநிலக் கட்சிகளை அப்புறப்படுத்துவதற்கு அக்கட்சிகள் செய்யும் ஊழலைப் பயன்படுத்துவது காங்கிரசு, பா.ச.க. வுக்கு இலகுவான வழியாக இருக்கிறது. மாநிலக் கட்சிகள் ஊழல் செய்வதையே சாக்கிட்டு அதற்கு மாற்றாக பா.ச.க தன்னை முன்னிறுத்த முயல்கின்றது. ஆனால், காங்கிரசு மட்டுமல்ல பா.ச.க. அரசியல் நேர்மை குறித்தும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். சவப்பெட்டி ஊழல், ஜெயின் ஹவாலா ஊழல் என்றொரு பெரும் பட்டியலே இருக்கிறது. ஊழலின் பெயரால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிக்கு மாற்றாக பா.ச.க. வை மக்கள் ஏற்கப் போவதில்லை. இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி பா.ச.க. தமிழ்நாட்டில் வளர்ந்து விடுமோ என்றெண்ணி தி.மு.க., அ.தி.மு.க வின் ஊழலை ஆதரிப்பது முற்றிலும் தவறு.

 

 

இங்கு நம்முடைய பணி என்பது அரசியல் நேர்மையும், உயர்ந்த கொள்கைகளும் கொண்ட வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டுவதே ஆகும். அவ்வியக்கங்களைத் தான் மாற்றாக மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்போரை அரசியலை விட்டு ஓட ஓட விரட்டி அவர்கள் கொள்ளை அடித்த சொத்தைப் பறி முதல் செய்ய வேண்டும். மேற்காசிய நாடுகளில் ஊழலுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக மக்கள் கிளந்தெழுந்துப் போராடியதைக் கண்டோம். கடந்த காங்கிரசு ஆட்சியின் போது வட இந்தியாவிலும் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடந்தன. அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் என்ற கருத்தையும் மக்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பது குற்றமல்ல என்ற கருத்தையும் மாற்ற வேண்டும்.  அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை இந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு உணர்த்த வேண்டும். இக்கட்சிகளை அண்டிப் பிழைப்பதும் மண்டியிடுவதும் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நம்மை அடிமைக் கூட்டமாக வைத்திருக்கவே உதவும். இவ்வகையில் இந்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் மிகத் தாமதமானதென்பதும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்துப் போராடுவது என்பது அரசியல் நேர்மைக்குப் புறம்பான செயல். இந்த கைது கொள்கை சார்ந்த மாற்று இயக்கங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவையை முகத்தில் அடித்தால் போல் உணர்த்தி நிற்கிறது என்று இளந்தமிழகம் இயக்கம் கருதுகிறது.

 

 

தோழமையுடன்,

தி.செந்தில்

ஒருங்கிணைப்பாளர் -இளந்தமிழகம்

03/10/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *